1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 4 ஜனவரி 2017 (18:27 IST)

’ஆர்.கே.நகரில் சசிகலா முதலமைச்சராக வர வேண்டி போஸ்டர்’ - கிழித்த நபருக்கு தர்ம அடி

ஆர்.கே.நகரில் சசிகலா முதல்வராக வரவேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் ஓட்டியிருந்த போஸ்டரை கிழித்த நபருக்கு அதிமுகவினர் தர்ம அடி கொடுத்தனர்.


 

கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அவர் வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவியினை ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் அவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி ஏற்றுக் கொண்டார்.

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலா விரைவில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கோரி வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற துணை சபாநயகருமான தம்பித்துரை, சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.

இதேபோல் ஓ.எஸ்.மணியன், உதயகுமார் போன்ற மற்ற அமைச்சர்களும் சசிகலா முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை முதன்முதலில் தீர்மானமாக போட்டது ஜெ. பேரவையினர். அதற்கு முழு ஆதரவு கொடுத்தவர் மதுசூதனன்.

சசிகலாவுக்கு ஆதரவு உள்ள அளவிற்கு எதிர்ப்பும் உள்ளதற்கு, அவருடைய புகைப்படம் தாங்கிய பதாகைகள் கிழிக்கப்படுவது, போஸ்டர்களில் சாணி அடிக்கப்படுவதுமே சாட்சி. இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் இதுபோன்ற செயல்களை யார் செய்கின்றனர் என்று கண்காணிக்க துவங்கினர்.

இந்நிலையில் முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வடசென்னை வடக்கு மாவட்ட ஜெ. பேரவை சார்பில் ஆர்.கே.நகருக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருந்தன.

இதனை கண்காணித்த அதிமுகவினர்கள் கிழித்த நபரை பிடித்து சராமாரியாக அடி கொடுத்தனர், பின்னர் பின்னர் அவரை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அங்கு அதிமுகவினர் திரண்டனர். இதனால் தண்டையார் பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.