வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (16:23 IST)

இடைத்தேர்தல் அறிவிப்பு – களத்தில் இறங்கிய அதிமுக !

18 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனுத் தாக்கல் செய்ய விரும்புவோர் செய்யலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு செய்துள்ள கட்சிகள் சட்டமன்றத் தேர்தலிலும் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் இடைத்தேர்தலில் நிற்காமல் திமுகவுக்கே தங்கள் ஆதரவைக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் திமுக வேட்பாளர்களே 18 தொகுதிகளிலும் நிற்க இருக்கிறார்கள். 

அதுபோலவே ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதிமுகவும் இடைத்தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்களையே நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது சம்மந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும்.

அந்த அறிக்கையில் ‘ஏப்ரல் 18-ம் தேதி காலியாக 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அதிமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 13-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரத்தை அதிமுக தலைமைக் கழகத்தில் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

13-ம் தேதி மாலையே விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும். திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்கெனவே விருப்ப மனு பெறப்பட்டுள்ளதால் அதற்கு விருப்ப மனு அளிக்கத் தேவையில்லை’ எனத் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும்  இடைத்தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் நேருக்கு நேர் மோதும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.