1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2017 (14:52 IST)

அமைச்சர்கள் நெருக்கடி ; ராஜினாமா செய்கிறாரா ஓ.பி.எஸ்? : தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழகத்தின் முதல் அமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பதவி ஏற்க வேண்டும் என அதிமுக மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் அவரின் தோழி சசிகலா அமர்ந்துள்ளார். மேலும், அவர்தான் அடுத்த முதல்வராக பதவியேற்க வேண்டும் என அதிமுக கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் குரல் கொடுத்து வருவது அதிகரித்து வருகிறது.
 
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ மற்றும் சேவூர் ராமச்ச்சந்திரன் ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது “அதிமுக தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் அந்த பணியை திறம்பட செய்வார். அவரது தலைமையின் கீழ் அதிமுக மேலும் வளர்ச்சியடையும். அவரால் தமிழகம் பாதுகாப்பாக இருக்கும். 
 
அவரின் பேச்சு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. உண்மையான தொண்டர்கள் அவருக்கு துணையாக நிற்பார்கள். விரைவில் அவர் ஆட்சி பொறுப்பிற்கு வர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். எனவே அவர் விரைவில் தமிழக முதல்வராக மக்கள் பணியாற்றுவார்” என கூறியிருந்தனர்.
 
இந்நிலையில் இன்று போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து விட்டு திரும்பிய துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது “கட்சியின் பொறுப்பும், ஆட்சியின் பொறுப்பும் வெவ்வேறு நபரிடம் இருப்பது நன்றாக இருக்காது. இதுதான் உத்தரபிரதேசத்தில் தற்போது பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
எனவே, பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவே தமிழக முதல் அமைச்சராகவும் பதவி ஏற்க வேண்டும் என, சசிகலாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதுதான் எனது விருப்பம். தொண்டர்களின் விருப்பம்” என அவர் கூறியுள்ளார்.
 
அவர் மட்டுமல்ல, சசிகலாவே முதல் அமைச்சராக வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, செங்கோட்டையன் மற்றும் சி.ஆர் சரஸ்வதி போன்றவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
 
இந்த விவகாரம் முதல் அமைச்சராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனது பதவியை அவர் சசிகலாவிற்கு விட்டு கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. 
 
சசிகலா முதல் அமைச்சராக நீடிக்க வேண்டுமானால் ஏதேனும் ஒரு தொகுதில் அவர் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆக வேண்டும்.  ஜெ. போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி தற்போது காலியாக உள்ளது. எனவே அங்கு போட்டியிட வாய்ப்பிருப்பதாக முதலில் கூறப்பட்டது. 
 
தற்போது திருமங்கலம் தொகுதி அடிபட்டு வருகிறது. அந்த தொகுதி, அதிமுக அமைச்சர் உதயகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும், அவர் விரைவில் ராஜினாமா செய்வார் எனவும், சசிகலா அங்கு போட்டியிட வாய்ப்பிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
இந்த விவகாரங்கள் தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.