வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2015 (06:49 IST)

வாக்காளர் பட்டியிலில் இருந்து அதிமுக எம்.பி. பெயர் நீக்கம்

வாக்காளர் பட்டியலில் இருந்து சேலம் அதிமுக எம்.பி. பன்னீர் செல்வம் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், இடமாற்றம் செய்தல் குறித்த சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர்களின் பார்வைக்காக வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டிருந்தன.
 
இந்த நிலையில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட, 10ஆவது வார்டில், புற்று மாரியம்மன் கோயில் தெரு, தாண்டவன் நகர் என்ற முகவரியில் உள்ள, சேலம் அதிமுக எம்.பி. பன்னீர்செல்வத்தின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருந்தது.
 
ஆனால், அவரது மனைவி மணிமொழி, மகள்கள் சரண்யா, மஞ்சு ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த தகவல் அறிந்த எம்.பி. பன்னீர்செல்வமும், அதிமுகவினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.     
 
இது குறித்து, சேலம் மக்களவை உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் நீக்கப்பட்டுள்ளது குறித்து தேர்தல் அதிகாரியிடம் விவரம் கேட்டேன். இதற்கு அவர், தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம் என்றும், அது விரைவில் சரி செய்யப்பட்டும் என்று தெரிவித்தார் என்றார்.