Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் கூவத்தூரில் அடைக்கப்படும் எம்.எல்.ஏக்கள் - பெரும்பான்மை நிரூபிக்கும் வரை அங்கேதான்..


Murugan| Last Updated: வியாழன், 16 பிப்ரவரி 2017 (17:06 IST)
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்கும் வரை எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்படுவார்கள் என்பது தெரியவந்துள்ளது..

 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதை அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் அமைந்துள்ள கோல்டன் பே  ரிசார்ட்டில் கடந்த 8ம் தேதி தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்களை கண்காணிக்க, மன்னார்குடியிலிருந்து குண்டர்கள் பலர் அங்கே காவலுக்கு நிறுத்தப்பட்டனர். அவர்களை மீறி செய்தியாளர்கள் கூட உள்ளே செல்ல முடியவில்லை. இதில், மதுரை தெற்கு பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ சரவணன், கூவத்தூரிலிருந்து மாறுவேடத்தில் தப்பி, ஓ.பி.எஸ் பக்கம் தஞ்சமடைந்தார். 
 
அவர்கள் விருப்பத்திற்கு மாறாக அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார்கள் என பல்வேறு தரப்பினர் புகார் கூறினர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், சசிகலா தரப்பு தன்னை கடத்தி சென்றதாக அவர் டிஜிபியிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்ட 5 பேர் மீது கூவத்தூர் பகுதி போலீசார் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
இந்நிலையில், சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் இன்று அழைப்பு விடுத்தார். இன்று  மாலை 4.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவும் நடைபெறுகிறது. இந்த அறிவிப்பு வந்தவுடன் அங்கு தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் சென்னை செல்ல அனுமதிக்கப்பட்டனர். 
 
இந்நிலையில், பதவியேற்பு விழா முடிந்ததும், அவர்கள் மீண்டும் கூவத்தூர் விடுதிக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்படுவார்கள் என செய்தி வெளியாகியுள்ளது. சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்கும் நாள் அன்று அவர்கள் சட்டசபைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதுவரை அவர்கள் கூவத்தூரிலேயே அடைத்து வைக்கப்படுவார்கள் என்பது தெரியவந்துள்ளது..
 
அவர்களை சுதந்திரமாக செயல்படவிட்டால், ஓ.பி.எஸ் தரப்பு அவர்களை தங்கள் பக்கம் இழுத்து விட வாய்ப்புள்ளதால், சசிகலா தரப்பு இந்த முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது...


இதில் மேலும் படிக்கவும் :