வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2016 (17:11 IST)

அதிமுக பிரமுகர்கள் யாரும் பங்கேற்காத யாகம்: ஜெ.வுக்காக ஓ.பி.எஸ்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய வேண்டி தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய யாகத்தில் அதிமுக பிரமுகர்கள் யாரும் பங்கேற்காததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
 

 
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி ஏராளமான கோவில்களில் யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
 
மேலும், அப்பல்லோ மருத்துவமனை வாசலிலும் தொடர்ந்து பூஜை, யாகம் மற்றும் பிரார்த்தனைகள் அதிமுகவின் பல்வேறு பிரிவுகள் சார்பில் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி தேனி மாவட்டம் போடியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீசெல்வம் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்தார்.
 
ஏகேஎம் மேல்நிலைப்பள்ளியில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியம் கோவில் உள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் திருப்பரங்குன்றம் கோவிலைச் சேர்ந்த ராஜம்பட்டர் தலைமையில் 60 அய்யர்களைக் கொண்டு இந்த யாகம் நடைபெற்று உள்ளது.  
 
ஆனால், இந்த சிறப்பு யாகத்தில் மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு, உள்ளிட்ட முக்கிய மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கவில்லை.
 
நிதி அமைச்சராகவும், முதலமைச்சரின் இலாகாக்களையும் கவனித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நடத்திய சிறப்பு யாகத்தில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்காதது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.