1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2014 (12:36 IST)

அதிமுக பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் மனு - மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆளுங்கட்சியான அதிமுக தோல்வி பயத்தின் காரணமாக 40 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடாவை தொடங்கியிருக்கிறார்கள். ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய் என ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாற்றியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர். இதற்கு முழுக்க முழுக்க காவல் துறை துணை நின்று கொண்டிருக்கிறது. எங்களுடைய நிர்வாகிகள் எவ்வளவு புகார் கொடுத்தாலும் காவல்துறையும், தேர்தல் கண்காணிப்பாளர்களும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்.
 
இதுகுறித்து திமுக சார்பாக நேற்று புகார் கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வேடிக்கை என்னவென்றால், 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியினர் 5 பேர் கூடக்கூடாது. ஆனால் ஆளுங்கட்சியினர் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் சேரலாம். எதற்கென்றால் பணம் கொடுப்பதற்காக.! தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும்போது அவர்களை கைது செய்வதற்கு ஏதுவாக 144 தடை உத்தரவு உள்ளது.
 
இதுகுறித்து தலைவர் கலைஞர் நேற்றே பேசியுள்ளார். 144 தடை உத்தரவு என்பது ஜனநாயகத்திற்கே கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இதுகுறித்து வழக்கு தொடர்ந்துள்ளோம். இன்று மாலை அந்த வழக்கு விசாரணைக்கு வரும்.
 
பணப்பட்டுவாடா என்பது அதிமுகவின் பலவீனத்தைதான் காட்டுகிறது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் திமுக தான் வெல்லப் போகிறது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
 
வழக்கம் போல பிரவீண்குமார் கவனிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நாங்களே களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். அதைத்தான் பிரவீண்குமாரிடம் சொல்லிவிட்டு வந்துள்ளோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.