வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2016 (18:17 IST)

முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுகவின் கூட்டணிக் கட்சி!

முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுகவின் கூட்டணிக் கட்சி!

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காவிரி பிரச்சனையில் தமிழர்கள் தாக்கப்பட்டதையும், கர்நாடக அரசையும் கண்டித்தும் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.


 
 
திமுக, தமாகா, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பிரதான எதிர்கட்சிகள் பலவும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் பாஜகவும், ஆளும் அதிமுகவும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
 
இந்நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தமீமுன் அன்சாரியின், மனிதநேய ஜனநாயக கட்சி இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது அரசியல் களத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்கள் நடத்திய சட்டப்போராட்டத்தின் விளைவாக உச்சநீதிமன்றம் கர்நாடக அரசை, காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத கன்னட வெறியர்கள் தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழர்களுக்கு எதிராகவும் வன்முறையில் இறங்கி வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.
 
இந்த அநீதிக்கு எதிராகவும், காவிரியின் உரிமைக்காகவும் தமிழக மக்கள் ஓரணியில் திரண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் காவிரி விவகாரத்தில் தவறான அணுகுமுறைகளை பின்பற்றும் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து தொழிற் சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் செப்-16 அன்று தமிழகத்தில் நடத்தும் பந்துக்கு ஆதரவு கேட்டு காவிரி போராட்டக் குழுவின் சார்பில் P.R.பாண்டியன் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ம.ஜ.க. நிர்வாகக் குழு பரிசீலித்தது.
 
தமிழக மக்களின் நலன் காக்க, அரசியல் பேதங்களை கடந்து நடைபெறும் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது என மனிதநேய ஜனநாயக கட்சி முடிவு செய்திருக்கிறது. அமைதி வழியில் நடைபெறும் இப்போராட்டம் வெற்றிபெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்துகிறது. என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.