1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2015 (21:03 IST)

கூடுதல் அணுமின் நிலையங்கள் கட்டுவது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் - உதயகுமார்

கூடுதல் அணுமின் நிலையங்கள் கட்டுவது தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் இரண்டு அலகுகள் தொடர்பாக தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வரவேற்கிறது.
 
ஆனாலும் தரமற்ற உபகரணங்களை, உதிரிப்பாகங்களை பயன்படுத்தியிருக்கும், ஆபத்தான இந்த அணுமின் உலைகளை உடனடியாக இயக்க வற்புறுத்துவது மக்களுக்குப் பெரும் தீங்குகளை விளைவிக்கும் என்று அஞ்சுகிறோம்.
 
எனவே தமிழக முதல்வர் கூடங்குளம் அணுமின் நிலையங்களின் உண்மை நிலை என்ன, அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றியெல்லாம் ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசிடமிருந்து கேட்டுப்பெற வேண்டும் என்றும், இந்நிலையில் அங்கே மேலும் அணு உலைகள் கட்டக்கூடாது என்று வலியுறுத்த வேண்டுமென்றும் தமிழக முதல்வரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
 
கூடங்குளம் அணுமின் நிலையங்களுக்கு தரமற்ற உபகரணங்கள் வாங்கப்பட்டிருகின்றன. எனவேதான் நீராவி தயாரிப்பான் டர்பைன் போன்ற பாகங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று ஆரம்பம் முதலே நாங்கள் கூறி வருகிறோம்.
 
இந்த அணு உலைகளின் உண்மை நிலை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகிறோம். ஆனால் மத்திய அரசும், அதன் அணுசக்தித் துறையும், இந்திய அணுமின் கழகமும் மவுனம் சாதித்துவருகின்றன.
 
கடந்த மே மாதம் 21-ந்தேதி அன்று கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் அணுஉலையில் வெறும் 600 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்வதாகவும், அணுஉலை வருடாந்திர பராமரிப்புக்காக இரண்டு மாதங்கள் மூடப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி ஜூன் 24-ந்தேதி அன்று அணுஉலை நிறுத்தப்பட்டது.
 
இந்நிலையில் ஆகஸ்ட் 12 அன்று அணுஉலையில் எரிகோல்களை அகற்றும் பணி முடியாததால், மின் உற்பத்தி மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என்று அறிவித்தார் வளாக இயக்குனர். மிக முக்கியமான அந்த வேலையைக்கூட இவர்களால் முன்கூட்டியே சிந்தித்துப்பார்க்கவோ, செயல்திட்டம் வகுத்துப் பணியாற்றவோ முடியவில்லை.
 
இரண்டாவது அணு உலையில் 96 விழுக்காடு வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் ஜூன் மாதம் மின் உற்பத்தி துவங்கும் என்று அறிவித்தார்கள். ஆனால் இன்று வரை அங்கே எதுவும் நடந்தபாடில்லை.
 
ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கூடங்குளம் அணுமின் திட்டத்தில் கூடுதல் அணுமின் நிலையங்கள் கட்டுவது தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். எனவே அணுஉலை விரிவாக்கத் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடவேண்டும்.
 
கூடங்குளம் அணுமின் திட்டம் எனும் மாபெரும் ஆபத்திலிருந்து தமிழர்களை காக்கவேண்டியது அ.தி.மு.க. அரசின் பொறுப்பாக இருக்கிறது. இந்த பிரச்சனையில் தமிழகத்தின் இன்னொரு பெரிய கட்சியான திமுக மவுனம் சாதிப்பது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல” என்று கூறியுள்ளார்.