வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 23 ஜனவரி 2017 (16:22 IST)

'போராட்டத்தைக் கைவிட சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை' - நடிகர் சிம்பு ஆவேசம்

தன்னெழுச்சியாக எழுந்த போராட்டம். இதற்கு யாரும் தலைமை தாங்கவில்லை. அதனால் போராட்டத்தைக் கைவிட சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.


 

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது தமிழக அரசு. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து, நடிகர் சிம்பு தனது ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் பேசுகையில், "போராட்டத்தை கைவிட இளைஞர்கள் கால அவகாசம் கேட்டனர். அதை வழங்கியிருக்கலாம். ஆனால், எப்படியாவது அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற நடவடிக்கையிலேயே காவலர்கள் இருந்தனர்.

தற்போது கூட, நான் மெரீனாவுக்குதான் சென்று கொண்டிருக்கிறேன். ஆனால், சாலைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. நமது போராட்டம் கிட்டதட்ட வெற்றியடைந்து விட்டது என்பது என் கருத்து.

இது தன்னெழுச்சியாக எழுந்த போராட்டம். யார் பின்னாலும், யாரும் வரவில்லை. இதற்கு யாரும் தலைமை தாங்கவில்லை. அதனால் போராட்டத்தைக் கைவிட சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை.

இந்த சூழலில் நம் பாதுகாப்பே முக்கியம். அதனால், தற்போதைக்கு போராட்டத்தைக் கைவிட வேண்டும். கோரிக்கை நிறைவேற்றாவிடின் மீண்டும் கூடுவோம். நான் எப்போதும் உங்கள் பின் வருவேன்’ என்று கூறியுள்ளார்.