1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2015 (16:20 IST)

’நாங்க கவுரமான குடும்பம்’ - நடிகர் சரவணன் செம்மரக் கடத்தல் செய்தி குறித்து கமிஷனரிடம் மனு

செம்மரக் கடத்தலில் தனக்கு தொடர்பு இருப்பதாக தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷ்னரிடம் சரவணன் மனு அளித்துள்ளார்.
 
திருப்பதி அருகே பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த 20 தமிழ் கூலித் தொழிலாளர்களை கடத்தி வந்து சுட்டுக் கொன்ற ஆந்திர அதிரடிப்படை போலீசார், கொல்லப்பட்டவர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக பொய்யுரைத்து வருகின்றனர்.
 

 
இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அதிரப்படை போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த படுகொலைகளைத் தொடர்ந்து செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட சிலரை சித்தூர் போலீசார் சென்னையில் கைது செய்ததாக வதந்தி பரவியது.
 
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நடிகர் சரவணன் எனவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இணையத்தில் இந்த செய்தி வேகமாக பரவியது. ஆனால், இந்த செய்தி வெறும் புரளி என்பதும், சரவணன் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதும் தெரிய வந்தது.
 
இந்நிலையில், செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் தான் கைது செய்யப்பட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப்பில் பரப்பியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரை சந்தித்து நடிகர் சரவணன் புகார் மனு கொடுத்தார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் நான் கைது செய்யப்பட்டதாக வாட்ஸ் அப்பில் தவறான தகவலை பரப்பிவிட்டனர். இந்த தகவல் செய்தியாக மலையாள பத்திரிக்கை ஒன்றில் எனது படத்துடன் வெளியாகி விட்டது.
 
சில தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியிட்டு விட்டனர். இந்த செய்தி வெளியானபோது, சென்னை தாம்பரம் முடிச்சூர் பகுதியில் நான் சினிமா படப்பிடிப்பில் இருந்தேன். செய்தியை பார்த்து எனது அம்மா போன் செய்து என்னிடம் பேசினார். எனது நண்பர்களும் நிறைய பேர் பேசினார்கள். செய்தியைக்கேட்டு நானும் கடும் அதிர்ச்சி அடைந்தேன். 
 

 
நான் அதிமுகவில் உறுப்பினராக இருக்கிறேன். அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளேன். எனது தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். கவுரவமாக வாழ்ந்து வரும் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பிவிட்டனர்.
 
வாட்ஸ் அப்பில் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். அவரும் கடும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.