1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2017 (10:34 IST)

கலவரத்தில் சாம்பல் ஆன நடுக்குப்பம் மீன் மார்க்கெட் - ராகவா லாரன்ஸ் ரூ.10 லட்சம் நிதியுதவி

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்ட போது, எழுந்த கலவரத்தில் தீ வைக்கப்பட்டு சாம்பலான சென்னை நடுக்குப்பம் மீன் மார்கெட் பகுதி மக்களுக்கு நிதியுதவி அளிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.


 

 
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்களை, அங்கிருந்து வெளியேற்றும் பணியில் கடந்த 23ம் தேதி அதிகாலை தமிழக போலீசார் ஈடுபட்டனர். அப்போது, மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள திருவல்லிக்கேனி, நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் எழுந்தது. மோதல் கலவரமாக மாறியது.
 
இதில், நடுக்குப்பம் மீன் மார்க்கெட் தீ வைத்து கொளுத்தப்பட்டு சாம்பலானது. இதனால், அங்கு மீன் வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்த ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த ஏராளாமனோரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், போலீசார்தான் தங்கள் மார்கெட்டுக்கு தீ வைத்தனர் என அந்தப் பகுதி  மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.


 

 
மேலும், கடந்த 5 நாட்களாக அந்த பகுதி மக்கள் எந்த வியாபாரமும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். தங்களுக்கு அரசு உதவ முன் வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
 
இந்நிலையில், நடிகரும், ஜல்லிக்கட்டு ஆதரவாளருமான ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். எரிந்து சாம்பலான மீன் மார்க்கெட்டை புணரமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.