வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (15:17 IST)

குற்றவாளிகள் கை காட்டிய முதல்வர்கள் தேவையா? நமக்கு தேவை மறு தேர்தல்தான்: பார்த்திபன் ஆவேசம்!

குற்றவாளிகள் கை காட்டிய முதல்வர்கள் தேவையா? நமக்கு தேவை மறு தேர்தல்தான்: பார்த்திபன் ஆவேசம்!

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் ஓபிஎஸ் அணி அவரை தோற்கடிக்க முயற்சிகளை செய்து வருகிறது. ஓபிஎஸ், எடப்பாடி இவர்கள் இருவரும் குற்றவாளிகளான ஜெயலலிதா மற்றும் சசிகலாவால் கை காட்டப்பட்டவர்கள்.


 
 
இந்த இருவரின் ஆட்சி மீதும் மக்களுக்கு அதிருப்தி உள்ளது. எனவே தமிழகத்துக்கு மறுதேர்தல் தான் நடத்த வேண்டும் என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். குற்றவாளிகள் கை காட்டியவர்கள் நமக்கு முதல்வராக வேண்டாம் என கூறியுள்ளார்.
 
இது குறித்து பார்த்திபன் கூறியது, மறைந்த ஜெயலலிதாவும் ஒரு குற்றவாளிதான் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அப்படி என்றால் ஒரு குற்றவாளி கை காட்டியவர் எப்படி முதல்வராக முடியும். அல்லது சமீபத்தில் குற்றவாளியான ஒருவர் கை காட்டுபவர்தான் நமக்கு முதல்வரா? இந்தக் குழப்பம் மக்களிடம் அதிமாகி இருக்கிறது.
 
கூவத்தூர் பக்கம் நான் போனேன். அங்குள்ள மக்கள் எம்எல்ஏக்களை கெட்ட கெட்ட வார்த்தைளால் திட்டுகிறார்கள். இப்படி பொதுமக்களின் எதிர்ப்புக்கும் அவலநிலைக்கும் பின்னாடி ஒரு அரசை அமைப்பது சரியா?
 
கூவத்தூரில் இருக்கும் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருப்பதாக திரும்ப திரும்ப சொல்கிறார்கள் என்றால் சொல்லிக் கொடுத்ததை சரியாக சொல்கிறார்கள் என்று அர்த்தம். ஒரு முறை சொன்னால் பரவாயில்லை. திரும்ப திரும்ப சொன்னால் கிளிப் பிள்ளை என்று அர்த்தம்.
 
ஜல்லிக்கட்டு நேரத்தில் மாணவர்களிடையே எழுந்த ஒரு புரட்சி போல் இன்னொரு புரட்சி வந்தே தீர வேண்டும். மறுபடியும் இங்கு ஒரு மாற்றம் வர வேண்டும். மறு தேர்தல் வர வேண்டும். மறுதேர்தல் வைத்தால் மக்களின் பணம் வீணாகப் போகும்தான்.
 
ஆனால், கூவத்தூர் பக்கமாக வந்தால் 1000 போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு யார் சம்பளம் வழங்குவது? அது மக்களுடைய பணம் தானே? எம்எல்ஏக்கள் அங்கு தங்குவது அவர்களுடைய விஷயமாக இருக்கலாம். அவர்களுக்கு ஏன் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்? மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர்.
 
ஆனால் அந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு எவ்வளவு அதிருப்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம். யாருடைய மெஜாரிட்டி நிரூபிப்பதற்கு பதிலாக மறுதேர்தலை ஏன் நடத்தக் கூடாது? ஒட்டுமொத்தமாக இருவருக்குமே மக்களிடம் முழுமையான ஆதரவு இல்லை. இன்னும் 4 ஆண்டுகள் நமக்கு இருக்கு. அதுவரைக்கும் நாம் ஏன் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொள்ள வேண்டும் என்றார்.