1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 30 ஜூலை 2015 (03:48 IST)

அப்துல் கலாம் மறைவு - இன்று கடைகள் அடைக்கப்படும்: த.வெள்ளையன்

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு நாள் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சுதந்திரத்துக்கு பின்பு இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்தவர் டாக்டர் அப்துல் கலாம்.
 
உலக அரங்கில் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலையில் இருப்பதற்கு அப்துல் கலாம்தான் காரணம். அவர் ஏவுகணை தொழில்நுட்பத்தின் பிதாமகன் ஆவார்.
 
கலாம், தனது இனிய பேச்சாலும், எழுத்தாலும் பள்ளி மாணவர்களிடையே அறிவுச்சுடரை வளரச் செய்தவர்.
 
இவ்வாறு புகழ் மிக்க, அப்துல் கலாமின் நல்லடக்கம் நடைபெறும் இன்று, காலை முதல் வணிகர்கள் கடைகள் இயங்காது. மூடப்பட்டு இருக்கும்.
 
 
மேலும்,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையுடன் இணைந்த வணிக அமைப்புகள் அவரவர் பகுதிகளில் மவுன ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.
 
இதே போல, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும், தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் அப்துல் கலாம் நல்லடக்கம் முடியும்வரை வியாபாரிகள் கடை அடைப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.