1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 ஜூன் 2018 (07:59 IST)

பாரதிராஜா மீது மேலும் ஒரு புதிய வழக்கு: கைது செய்யப்படுவாரா?

கடந்த சில மாதங்களாகவே இயக்குனர் பாரதிராஜா பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வரும் நிலையில் அவர் மீது ஏற்கனவே ஒருசில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு வழக்கை திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்துள்ளனர்.
 
இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் நாராயணன் என்பவர் பாரதிராஜா மீது நேற்று ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தேசத்துக்கு விரோதமாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டு இயக்கம் எதுவும் இல்லை என்றும், அப்படியொரு சூழலை ஏற்படுத்தி விடாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வடபழனி போலீஸ் நிலையத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி கொடுத்துள்ளதால் பாரதிராஜா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாராயணன் தனது மனுவில் கூறியுள்ளார்.
 
இந்த புகார் மனுவின் அடிப்படையில் பாரதிராஜா மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், மக்களையும் அரசையும் அச்சுறுத்தும் வகையில் பேசுதல் ஆகிய இரு பிரிவுகளில் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்