வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2015 (16:07 IST)

நரபலி விவகாரம் : ஏழாவது முறையாக எலும்புக் கூடு கண்டெடுப்பு - தொடரும் சகயாத்தின் பணி

கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுத்தது தொடர்பாக, சட்ட ஆணையர் உ.சகாயம் முன்னிலையில் நடத்தப்பட்ட தோண்டும் பணியில் ஏழாவது எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
நரபலி புகாரையடுத்து மதுரை மாவட்டம் மேலூர் இ.மலம்பட்டியை அடுத்துள்ள சின்னமலம்பட்டி மணிமுத்தாறு பகுதியில் ஞாயிறன்றும் தொடர்ந்து தோண்டும் பணி நடைபெற்றது. இதில் மேலும் ஒரு எலும்புக்கூடு கிடைத்துள்ளது.
 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிரானைட் குவாரிகளில் மனநலம் பாதித்தோரை அழைத்து வந்து நர பலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 14ஆம் தேதி இ.மலம்பட்டியை அடுத்துள்ள சின்னமலம்பட்டி மணிமுத்தாறு பகுதியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் முன்னிலையில் தோண்டியதில் நான்கு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
 
சட்ட ஆணையர் உ.சகாயம் கோரியதையடுத்து, அதே இடத்தில் 12 அடி ஆழம் வரை தோண்டும் பணி ஞாயிறன்றும் தொடர்ந்து நடைபெற்றது. கோட்டாட்சியர் செந்தில்குமாரி, சட்ட ஆணையர் உ.சகாயம் குழுவைச் சேர்ந்த ஆல்பர்ட், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வேலு ஆகியோர் தலைமையில் இப்பணி நடைபெற்றது.
 
12 அடி ஆழம் தோண்டிய நிலையில் ஒரு எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இதுவரை மொத்தம் ஏழு எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து தோண்டும் பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.