1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2016 (09:19 IST)

7 தீர்மானங்களுடன் அதிமுக பொதுக்குழு: கசிந்த தகவல்!

7 தீர்மானங்களுடன் அதிமுக பொதுக்குழு: கசிந்த தகவல்!

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து முதன் முதலாக அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் இந்த கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல்கள் வருகின்றன.


 
 
ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை இனிமேல் வகிக்கப்போவது யார் என்ற முக்கிய முடிவு இன்று தெரிந்துவிடும்.
 
கடந்த 5-ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து சசிகலா பொதுச்செயலாளர் பதவியை வகிக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அவருக்கு கனிசமான எதிர்ப்பும் உள்ளது.
 
இதனையடுத்து இன்று காலை முதலே சிறப்பு பேருந்து மூலம் அதிமுகவினர் பொதுக்குழுவுக்கு வந்தவண்ணம் உள்ளனர். முதலமைச்சரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் சற்று முன்னர் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு சென்றார்.
 
இன்று நடைபெற இருக்கும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா கலந்துகொள்ளமாட்டார். அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கும் பொது குழுவில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானம் சசிகலாவிடம் கொண்டு கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
 
பொதுக்குழு கூடியதும் கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்வார். மேலும் இந்த பொதுக்குழுவில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. முதலாவதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். பின்னர் இரண்டு நிமிடங்கள் ஜெயலலிதாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படும்.
 
ஐந்தாவது தீர்மானமாக அதிமுக பொதுச்செயலாளர் யார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என அதிமுக வட்டார தகவல்கள் கூறுகின்றன. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.