1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2014 (10:22 IST)

6-வது கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

நாடாளுமன்ற மக்களவைக்கு 6-வது கட்டமாக நாளை (வியாழக்கிழமை) 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்திய அரசின் நாடாளுமன்ற மக்களவைக்கு 9 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுவரை 5 கட்டங்களில் 231 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது. நாளை (வியாழக்கிழமை) 6-வது கட்டமாக 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. மாநில வாரியாக தேர்தலை சந்திக்கும் தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு:-
 
தமிழ்நாடு - 39
 
புதுச்சேரி - 1
 
அசாம் - 6
 
பீகார் - 7
 
சத்தீஷ்கார் - 7
 
காஷ்மீர் - 1
 
ஜார்கண்ட் - 4
 
மத்திய பிரதேசம் - 10
 
மராட்டியம் - 19
 
ராஜஸ்தான் - 5
 
உத்தரபிரதேசம் - 12
 
மேற்கு வங்காளம் - 6
 
117 தொகுதிகளில் மொத்தம் 1,988 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 
நாளை தேர்தலை சந்திக்கிற தலைவர்களில் நடிகையும், பாரதீய ஜனதா வேட்பாளருமான ஹேமமாலினி, சமாஜ்வாடி கட்சியிலிருந்து விலகி ராஷ்டிரீய லோக்தளம் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள அமர்சிங், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் சுனில் தத்தின் மகள் பிரியாதத், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுமித்ரா மகாஜன், தீபா தாஸ் முன்ஷி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, மத்திய அமைச்சர் நமோ நாராயண் மீனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
 
12 மாநிலங்களிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடந்து வந்தது. இந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணிக்கு முடிந்தது. நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடக்கிறது.
 
நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பீகார், ஜார்கண்ட், சத்தீஷ்கார், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
வரும் 30, மே 7, மே 12 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக மீதமுள்ள 195 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 16 ஆம் தேதி நடக்கும். மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது அன்று இரவு தெரிந்து விடும்.