வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 23 மே 2015 (17:19 IST)

தாண்டவமாடும் கந்து வட்டிக் கொடுமை - தேனியில் 5 பேர் தீக்குளிக்க முயற்சி

தேனியில் கந்து வட்டிக் கொடுமை காரணமாக, நடுரோட்டில் 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தேனி நகரின் மையப்பகுதியான நேரு சிலை அருகே வந்த 5 பேர் திடீரென, தங்களின் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். 
 
அப்போது, அந்த பகுதியில் நின்ற காவல்துறையினர் ஓடிச்சென்று அவர்களை தடுத்து காப்பாற்றி, விசாரணைக்காக, தேனி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
 
அங்கு, அவர்களிடம் காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் விசாரணை நடத்தினார். அப்போது, தீக்குளிக்க முயன்றவர்கள், தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி குருசாமி தெருவை சேர்ந்த பேயத்தேவர் என்பவருடைய மகன் கண்ணன் (38), அவரது மனைவி மாலதி (32), தாயார் நாகம்மாள் (60), ராஜா என்பவர் மனைவி ராஜலட்சுமி, அவரது மகன் மனோஜ்குமார் ஆகிய 5 பேர் என தெரிய வந்தது.
 
கந்து வட்டி கொடுமையால் தங்களின் வீடு அபகரிக்கப்பட்டு உள்ளதாகவும், அதை மீட்க தாங்கள் எவ்வளவோ போராடிம் முடியவில்லை என்பதால்தான் தீக்குளிக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 
 
இந்த சம்பவம் தொடர்பாக தேனி நகர காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.