வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2017 (12:15 IST)

ஓபிஎஸ் அணியில் சேர இருக்கும் 5 அமைச்சர்கள்?: விரைவில் கலையப்போகும் ஆட்சி!

ஓபிஎஸ் அணியில் சேர இருக்கும் 5 அமைச்சர்கள்?: விரைவில் கலையப்போகும் ஆட்சி!

அதிமுக ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. சசிகலா சிறைக்கு சென்றுள்ளதால் அந்த அணி தற்போது தினகரன் கட்டுப்பாட்டில் உள்ளது.


 
 
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கிய பின்னர் அப்போது அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் உட்பட 11 எம்எல்ஏக்களும் 12 எம்பிக்களும் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். இதனையடுத்து மீதமுள்ள அதிமுக எம்எல்ஏக்களை வைத்து சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.
 
இந்நிலையில் மீண்டும் ஓபிஎஸ் அணியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வர இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 7-ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் மேலும் சில அமைச்சர்கள் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
இதனால் ஓபிஎஸ் அணியில் இருந்தால் மத்திய அரசின் தயவு தங்களுக்கு கிடைக்கும், வருமான வரித்துறையிடம் இருந்து தப்பிக்கலாம் என சில அமைச்சர்கள் நினைக்கின்றனர். இதனால் ஓபிஎஸ் அணியில் மேலும் 5 அமைச்சர்கள் மற்றும் சில எம்எல்ஏ வர உள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
மேலும் 5 அமைச்சர்கள் மற்றும் சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணியில் வர இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஓபிஎஸ் கை மேலும் ஓங்கி வருகிறது. அதிமுகவும் விரைவில் ஓபிஎஸ் வசம் வந்துவிடும் என பேசப்படுகிறது.