1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

40 தொகுதிக்கும் காங்கிரஸ் விருப்பமனு வாங்கியது - தனித்து போட்டி?

காங்கிரஸ் கட்சி சார்பில் 40 பாராளுமன்ற தொகுதிக்கும் நேற்று விருப்பமனு பெறப்பட்டது. முதல் நாளில் 300 பேர் விருப்பமனு பெற்று, பூர்த்தி செய்து கொடுத்தனர்.
FILE

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் தங்களை தயார் செய்து வருகிறது. தொண்டர்களிடம் விருப்பமனு வாங்குதல், நேர்காணல் நடத்துதல் என்று கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும் நேற்று முதல் விருப்பமனு வாங்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று மாலை 4 மணிக்கு 40 தொகுதிக்கும் விருப்பமனு வழங்கப்பட்டது. விருப்ப மனுவை வாங்கி, பூர்த்தி செய்து கொடுக்க ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்தனர். விருப்பமனுக்களை பெறுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்கள் தணிகாசலம், சிரஞ்சீவி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினர் தொண்டர்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

பொது தொகுதிக்கு விண்ணப்பமாக ரூ.10 ஆயிரம் கட்டணமும், தனித்தொகுதி மற்றும் மகளிருக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி அவரது ஆதரவாளர்களான சாய்லட்சுமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராஜேந்திரன், வேலுத்தேவர் உள்ளிட்ட 15 பேர் விருப்பமனு கொடுத்தனர்.

தென் சென்னையில் ஜி.கே.வாசன், மத்திய சென்னையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சிவகங்கை மற்றும் தென்சென்னை தொகுதியில் ப.சிதம்பரமும், திண்டுக்கல்லில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன், திருச்சியில் திருநாவுக்கரசரும் போட்டியிடக்கோரி அவரது ஆதரவாளர்கள் விருப்பமனு கொடுத்தனர்.

அரக்கோணம் தொகுதியில் போட்டியிட இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் நாசே ராஜேஷ், நாகப்பட்டினம்(தனி) தொகுதியில் போட்டியிட ஆர்.என்.அமிர்தராஜா, மத்திய சென்னையில் போட்டியிட மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் விருப்பமனு செய்தனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்பட்ட விருப்பமனுவில், எந்த ஆண்டு கட்சியில் சேர்ந்தீர்கள்? காங்கிரஸ் கட்சிக்காக சிறை சென்றது உண்டா? தேர்தலில் போட்டியிட்டது உண்டா? உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்றிருந்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 300 விருப்பமனுக்கள் பெறப்பட்டது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பலமான அணியை அமைத்திருந்தது. தற்போது காங்கிரஸ் கூட்டணியில் தமிழகத்தில் எந்த கட்சியும் இடம் பெறவில்லை. ஆகவே காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்பது கேள்விகுறியாக உள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் மீண்டும் இணைந்து தேர்தலை சந்திக்கவும், அந்த கூட்டணியில் தே.மு.தி.க.வை இடம் பெற செய்வதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டதாக கூறப்படுவது தவறு. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நேரத்தில் காட்சிகள் மாறும்‘ என்றார்.

இதற்கிடையே இன்றுடன்(செவ்வாய்க்கிழமை)யுடன் விருப்பமனு வாங்குதல் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து விருப்பமனுக்கள் அனைத்தும் மத்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.