1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 8 ஜூலை 2015 (05:58 IST)

அதிமுக அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி 3 நாள் பொதுக் கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழகம் முழுக்க 3 நாள் பொதுக் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறித்துள்ளார்.
 

 
இது குறித்து, அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எதிராக யார் நிற்க முடியும்? என்ற மானிடத்தின் தொன்று தொட்ட நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் எல்லா வகையான சோதனைகளையும் வென்று காட்டி, அதிமுக மக்கள் பணியில் முழு அர்ப்பணிப்போடு 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 5ஆம் ஆண்டில் வெற்றி நடை போட்டுகிறது.
 
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்’ என்ற எம்ஜிஆரின் கொள்கை முழக்கத்திற்கு ஏற்ப, தமிழக மக்களுக்காக உயர்ந்த லட்சியங்களோடு அதிமுக அரசு பல்வேறு சரித்திர சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.
 
இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டாய்த் திகழும் முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி, அந்தத் திட்டங்கள் அடைந்திருக்கும் வெற்றியின் காரணமாக தேசிய அளவிலும், உலக அரங்கிலும் பல பாராட்டுகளையும், சான்றிதழ்களையும் எனது தலைமையிலான அரசு பெற்று வருகிறது.
 
எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்பு, மின் தேவை முற்றிலும் நிறைவு செய்யப்பட்ட மாநிலமாகத் தமிழகம் இப்பொழுது ஒளிர்கிறது. 2011, சட்ட மன்றப் பொதுத் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட இந்த முழு முதற் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமிதம் அதிமுக அரசிற்கு மட்டுமே உண்டு.
 
இன்னும் பல்வேறு முன்னோடித் திட்டங்களையும் தமிழக மக்களுக்காகச் செயல்படுத்தி வரும் அதிமுக அரசு, அடுத்து வரும் ஆண்டுகளிலும் பார் போற்றும் திட்டங்களை மக்களுக்குச் செய்யக் காத்துள்ளது.
 
எனது தலைமையிலான அரசின் நான்காண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் உயர்விற்கும் நிகழ்த்தப்பட்ட எண்ணற்ற சாதனைகளை விளக்கியும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகப் பெற்றிருக்கும் மகத்தான வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், 10.7.2015 வெள்ளிக்கிழமை முதல் 12.7.2015 ஞாயிற்றுக் கிழமை வரை 3 நாட்கள் கழக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
 
அதிமுகச் சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தமது பகுதிகளில் நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
 
மாவட்ட அதிமுகச் செயலாளர்களும், மாவட்டக் கட்சி நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளைக் கட்சி, எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்படக் கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும்.
 
பொதுக் கூட்டங்கள் நடந்து முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி மற்றும் ஊராட்சி, கிளை, வார்டு, வட்டங்கள் உட்படப் பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம் அதிமுக அரசின் நான்காண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் உயர்விற்கும் நிகழ்த்தப்பட்ட எண்ணற்ற சாதனைகளை விளக்கியும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் கட்சி பெற்றிருக்கும் மகத்தான வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் வாயிலாகப் பிரச்சாரப் பணிகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.