வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2015 (09:26 IST)

பணக்கார பெண்களுக்கு வலைவிரித்து 4 பேரை திருமணம் செய்த இன்ஜினியர்

4 பெண்களை தன் வசிய பேச்சால் மடக்கி திருமணம் செய்து பணம், நகை உள்ளிட்டவற்றை அபகரித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சென்னை அண்ணாநகர் மேற்கு டி.வி.எஸ் அவென்யூவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் சீனிவாசன். அவருக்கு வயது 38.
 
சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்த சீனிவாசன் சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ. 1.25 லட்சம் சம்பளத்தில் வேலை செய்கிறார்.
 
நுனிநாக்கு ஆங்கிலம், அடுக்கு வசனம், வசிய பேச்சு ஆகியவற்றை பயன்படுத்தி பெண்களை மயக்குவதில் சீனிவாசன் திறமைசாலியாக இருந்துள்ளார்.
 
இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சீனிவாசனுக்கு, சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பி.பி.ஏ பட்டதாரி பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நடந்தது.
 
இந்தத் திருமணத்துக்கு பின்னர் சீனிவாசன், அந்தப் பெண்ணிடம் இருந்து ரூ. 25 லட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு சொந்தமான ரூ. 1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வீட்டை தனது பெயருக்கு எழுதித் தரும்படி சீனிவாசன் தொடர்நது வலியுறுத்திவந்துள்ளார்.
 
இதனால், சீனிவாசனின் நடவடிக்கையில் பெண் வீட்டாருக்கு பல்வேறு  சந்தேகங்கள் எழுந்துள்ளன. சீனிவாசன் திருமணம் முடித்த சில நாட்களில் அடிக்கடி வெளியூர் செல்வது, பல்வேறு பெண்களுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசுவதுமாக இருந்ததால் அவரைப் பற்றி, அவர்கள் விசாரிக்கத் தொடங்கினர்.
 
அப்போது சீனிவாசனுக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது. இதனால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். 
 
இது குறித்து காவல்துறை ஆய்வாளர் பிரான்வின்டேனி வழக்குப் பதிவு செய்து  விசாரித்தார். அதில், கடந்த 2001 ஆம் ஆண்டு மாதவரத்தில் வசிக்கும் மதுரையை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஒருவரை சீனிவாசன் திருமணம் செய்திருந்தது தெரியவந்தது. 
 
இவர்களுக்கு 11 மற்றும் 8 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில். சீனிவாசன் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தன் வலையில் சிக்கவைத்துள்ளார். அந்தப் பெண்ணை கன்னியாகுமரியிலேயே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.
 
இதைத் தொடர்நது  சில ஆண்டுகளிடல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் சீனிவாசன், மேலும் பல பணக்கார பெண்களுக்கு வலை விரிக்கத் தொடங்கியுள்ளார். 
 
அப்போது கோவையை சேர்ந்த அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரையும், சீனிவாசன் தனது வலையில் விழ  வைத்துள்ளார். இதையடுத்து, கடந்த 2012 ஆம் ஆண்டு 3 ஆவதாக அந்த மருத்துவரை திருமணம் செய்துள்ளார்.
 
அவரிடம் இருந்து ஏராளமான பணம், நகைகளை ஏமாற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவருடன் சில மாதம் மட்டும் குடும்பம் நடத்திய அவர், தனது பணி காரணமாக வெளியூர்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டி  வரும் என கூறி சென்னைக்கு வந்துள்ளார்.
 
இதை நம்பிய அந்த மருத்துவர் தனது கணவர் வேலை காரணமாகவே பல ஊர்களைச் சுற்றி வருகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போதுதான் சீனிவாசன், பி.பி.ஏ பட்டதாரிப் பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த சீனிவாசன் திருமணம் செய்து கொண்ட அந்த 4 பெண்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணமும், நகையும் அபகரித்துள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சீனிவாசனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.