வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (06:37 IST)

சென்னை 375: சமூக நீதிப் பயணத்தில் சென்னை

தமிழக சமூக மறுமலர்ச்சியில், சமூக நீதிப் பயணத்தில் சென்னையின் பங்கு மிக முக்கியமானது. 


1919 நவம்பர் 20 ஆம் தேதி, சென்னையில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடந்த ஒரு கூட்டம், அதற்குப் பின் வந்த ஆண்டுகளில் தமிழகத்தின் அரசியல் வரலாற்றையே மாற்றியெழுதியது. ஏன் இந்திய அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் சொல்லலாம்.
 
அந்தக் கூட்டத்தில் சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள பிரசித்திவாய்ந்த பிராமணரல்லாத தலைவர்கள் பங்கேற்றனர்.
 
அந்தக் கூட்டத்தில் தான் பிரமணரல்லாதவர்களின் நலனைப் பாதுகாக்கவென ஒரு அமைப்பை உருவாக்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அந்தச் சங்கம் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.
 
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றுவதற்குக் காரணமே சென்னையின் தென்பகுதியில் தோன்றிய மற்றொரு சங்கம் தான் என்கிறார்கள் திராவிட இயக்க ஆய்வாளர்கள்.
 
அன்னிபெசன்ட் அம்மையாரால் தோற்றுவிக்கப்பட்ட ஹோம் ரூல் இயக்கம் உயர் ஜாதியினரின் மேலாதிக்கத்தை முன்னிறுத்திய நிலையில், அதற்கு எதிராக தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றியது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
பின்தோன்றிய திராவிட இயக்கங்களுக்கு இந்தச் சங்கமே அடிப்படையாக அமைந்தது.
 
இதேபோல, தென்னிந்தியா முழுவதையும் ஒருங்கிணைத்து திராவிட நாடு என்ற பெயரில் தனிப் பிரதேசத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தும் சென்னையில் தான் முன்வைக்கப்பட்டது.
 
இதற்காக தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கி நடைபயணமும் மேற்கொள்ளப்பட்டது.
 
ஆனால், அந்தப் பயணம் சென்னையில் முடிவடைந்த்தைப் போல, அந்தக் கருத்தாக்கமும் சென்னையைத் தாண்டிச் செல்லவில்லை என்றும் திராவிட இயக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் சென்னையே முன்னிலை வகித்தது. இந்திக்கு எதிராக தமிழகம் முழுவதுமே கிளர்ந்தெழுந்தாலும் சென்னையில்தான் அது மையம் கொண்டிருந்தது.
 
1949ல் சென்னையில் இருக்கும் ராபின்சன் பூங்காவில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்டது.
 
பிரிட்டஷ் ஆட்சிக் காலத்தில் ஒரிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் துவங்கி கன்னியாகுமரி வரை சென்னை ராஜதானி என்பது விரிந்து பரந்திருந்தாலும், அரசியல் இயக்கங்கள் இங்கேதான் மையம் கொண்டிருந்தன.
 
சமூக நீதி இயக்கம் மட்டுமல்லாமல் மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கமும்கூட சென்னையில் தான் உருவெடுத்தது.