வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 31 மார்ச் 2016 (16:18 IST)

திமுக தலைக்கு மேல் ’2ஜி’ கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்

ஜெயலலிதா உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்து இருக்கிறார். இதேபோல் 2ஜி வழக்கு திமுகவின் தலைக்கு மேல் கத்திபோல் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
திருச்சி உறையூரில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், “வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஜெயலலிதா உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்து இருக்கிறார். இதேபோல் 2ஜி வழக்கு திமுகவின் தலைக்கு மேல் கத்திபோல் தொங்கிக் கொண்டிருக்கிறது.
 
திமுக, அதிமுக இரண்டுமே ஊழலை மட்டுமே பிரதானமாகக் கொண்டு ஆட்சி நடத்திய கட்சிகள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த கட்சிகளை வருகின்ற தேர்தலில் தூக்கி எறிவோம். திமுக - அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையிலான ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
 
தொண்டர்கள் அதைத் தவறவிடாமல் மக்கள் நலக்கூட்டணியை வெற்றி பெறச்செய்ய வேண்டும். திமுக - அதிமுகவிடம் மீண்டும் ஆட்சி சென்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்.
 
தேர்தல் அறிவிப்பு வந்ததுமே பாஜக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே தேமுதிகவை கூட்டணிக்கு சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தன. திமுக-வுடன் ஒருமுறை கூட முறையான சந்திப்பு நடைபெறவில்லை. ஆனால், திமுக தலைவர் கருணாநிதி அவராகவே பழம் நழுவி பாலில் விழப் போகிறது என கூறிவந்தார்.
 
ஆனால், தமிழகத்தை முன்னணி மாநிலமாக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு மக்கள் நலக் கூட்டணியில் தன்னை இணைத்து கொண்டார் விஜயகாந்த். ஆகவே, தற்போது பழம் நழுவி தேனில் விழுந்தது போல மாபெரும் கூட்டணியாக தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி உருவெடுத்துள்ளது" என்று கூறியுள்ளார்.