1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஈரோடு வேலுச்சாமி
Last Updated : சனி, 25 அக்டோபர் 2014 (15:02 IST)

சத்தியமங்கலம் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, இரண்டு வாலிபர்கள் பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
 

(கோப்புப் படம்)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது சிக்கரம்பாளையம். இங்கு கிராம உதவியாளராக பணியாற்றுபவர் ராஜன். இவரின் மகன் சுரேந்திர பிரசாத் (23). இவர் சத்தியமங்கலம் வனத் துறையின் தீயணைப்புக் காவலராகத் தற்காலிகப் பணியில் உள்ளார். இவரின் உறவினர் பாப்பான் என்பவரின் மகன் வினோத்குமார் (22). இவர்கள் இருவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் திரைப்படத்திற்குச் சென்றுள்ளனர்.
 
இரண்டாவது காட்சிக்குச் சென்றுவிட்டு நேற்று நள்ளிரவு பண்ணாரி அருகே உள்ள ராஜநகர் வழியாக வந்துள்ளனர். அப்போது கஸ்துõரி நகர் என்ற இடத்தில் தரைப் பாலத்தைக் கடக்கும்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் வாலிபர்கள் இருவரையும் இருசக்கர வாகனத்துடன் அடித்துச் சென்றுவிட்டது. இன்று காலை தண்ணீர் சென்ற ஓடையில் இருவர் உடல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
 
ராஜன் கிராம நிர்வாக உதவியாளர் என்ற முறையில் இறந்தவர் யார் என்று பார்க்கச் சென்றபோது ஓடையில் தண்ணீர் அடித்துச் சென்று இறந்து கிடந்தது தன் மகன் என்று தெரிந்ததும் கதறினார். தகவல் தெரிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் சேதுராஜ், போலீஸ் டி.எஸ்.பி. மோகன், இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று இரண்டு உடல்களையும் மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு வந்தனர்.
 
சம்பவ இடத்திற்கு பாவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர். இறந்த சுரேந்திர பிரசாத் என்ற வாலிபருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. அதற்குள் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.