செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (13:16 IST)

கன மழைக்கு தமிழகத்தில் 2 பேர் பலி, பல மாவட்டங்களில் சேதம்

தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று பெய்த கன மழையில் 2 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்தது அதில் ஈரோடு, அறச்சலூர் மற்றும் பெருந்துறை பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் அறச்சலூரில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். விஜயமங்கலத்தில் மின்னல் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.

தமிழக்த்தில் குமரிமாவட்டத்தில் மழை அதிகமாக பெய்துள்ளது. திருச்சி, கோவை, ஈரோடு, தஞ்சை, சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் நேற்று கன மழை பெய்துள்ளது.

கோவை மாவட்டத்தில் பெய்த பலத்த காற்றுடன் கூடிய கன மழையால் சாலையில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நம்பியூர் மற்றும் அந்தியூர் பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பூரில் பெய்த மழையால் ரயில்வே சுரங்கப்பால பணிக்காக சாக்கடை கால்வாய் துண்டிக்கப்பட்டுள்ளதால், சிட்கோ பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களுக்குள் வெள்ள நீரும், கழிவு நீரும் புகுந்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் மற்றும் எந்திரங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

நாமக்கல் மாவட்டத்தில் பெய்த கன மழையால் திருச்செங்கோட்டில் உள்ள சூரியம்பாளையம் ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த கன மழையால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் மழையில் 2 வீடுகள் இடிந்து விழுந்த்து, ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.