வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2015 (11:44 IST)

சுங்க இலாகா அலுவலகத்தில் 3½ கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கம் மாயம்: சி.பி.ஐ. விசாரணை

திருச்சி சுங்க இலாகா அலுவலகத்தில் 3½ கோடி மதிப்புள்ள, 15 கிலோ தங்கம் மாயமாகியுள்ளது; இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவுள்ளது.


 

 
திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் மத்திய அரசின் சுங்கத்துறை ஆணையர் அலுவலகம் உள்ளது. திருச்சி, தஞ்சை, நாகை உள்பட மத்திய மண்டலத்துக்குட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் விமான நிலையம் வழியாகவும், கடலோர மாவட்டங்களிலும் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்க கட்டிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
 
இது தொடர்பான வழக்கு முடியும் வரை அவ்வப்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, தேவையான போது, பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து தங்க கட்டிகள் மற்றும் பொருட்களை எடுத்து சென்று அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பது வழக்கம். ஒவ்வொரு கடத்தல் சம்பவத்திலும் பிடிபடும் தங்க கட்டிகள் மற்றும் பொருட்கள் தனித்தனியாக பெட்டிகளில் வைக்கப்படும். அதன்மேல் வழக்கு குறித்த குறிப்புகள் எழுதி வைக்கப்படுவது வழக்கம். 
 
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 18½ கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.  பின்னர் இந்த தங்க கட்டிகளை திருச்சி சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்தனர். இது தொடர்பான வழக்கு திருவாரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
 
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது திருவாரூர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 18½ கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். ஆனால் அவற்றின் எடை குறைவாக இருந்தது. 
 
இதைத் தொடர்ந்து, அந்த தங்க கட்டிகளின் எடையை சரிபார்த்தனர். அதில் ரூ.3½ கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கம் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் சுங்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு இது குறித்து கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை புகார் கொடுத்தார். இது தொடர்பாக சுங்கத்துறை அலுவலக ஊழியர்கள் 10 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
 
 
திருச்சியில் உள்ள சுங்கத்துறை ஆணையர் அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருவதால், 15 கிலோ தங்கம் மாயமான வழக்கினை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக சுங்கத்துறை ஆணையர் கே.சி.ஜானி, உதவி ஆணையர் வெங்கடேசலு ஆகியோர் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். 
 
மேலும், தங்கம் மாயமானது குறித்து சி.பி.ஐ. அலுவலகத்தில் புகார் அளிக்கவும் உள்ளனர். இதையத்து சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும், சி.பி.ஐ. அதிகாரிகள் திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சுங்கத்துறை அலுவலகத்த்தில், பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்படாமல் தங்கம் மட்டுமே மாயமாகி உள்ளது. இதனால் காவல்துறினரும், சுங்கத்துறை அதிகாரிகளும் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர். மர்ம மனிதர்கள் யாரேனும் மாற்று சாவி மூலம் பெட்டகத்தை திறந்து இருப்பார்களா? என்னும் கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
15 கிலோ தங்கம் மாயமான, சுங்கத்துணை ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று காலை காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தினர் . அங்கு நுழைவு வாசலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் முக்கியமான பாதுகாப்பு பெட்டகம் உள்ள அறை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என தெரிகிறது. வழக்கமாக ஒரு சில அதிகாரிகள் மட்டுமே பாதுகாப்பு பெட்டகம் உள்ள அறைக்கு சென்று வருவார்கள்.
 
 
அங்கு கண்காணிப்பு கேமரா இல்லாததால் குறிப்பிட்ட அதிகாரிகளை தவிர, வேறு யாரெல்லாம் அந்த அறைக்குள் சென்று வந்தனர் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மாயமான தங்க கட்டிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே பெட்டகத்தில் வைக்கப்பட்டதால் சரியாக எந்த தேதியில் மாயமானது என்பதையும் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ரூ.3½ கோடி மதிப்பிலான தங்கம் எங்கே போனது என்பதை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.