வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2017 (10:41 IST)

எடப்பாடி பழனிச்சாமிக்கு 116 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை: 6 எம்எல்ஏக்கள் அதிகமாகவே உள்ளது!

எடப்பாடி பழனிச்சாமிக்கு 116 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை: 6 எம்எல்ஏக்கள் அதிகமாகவே உள்ளது!

தமிழக சட்டசபையில் இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் பழனிச்சாமி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் அவருக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தாலே அவரது தலைமையிலான அரசு தப்பித்துவிடும்.


 
 
ஓபிஎஸ் ராஜினாமா சர்ச்சை, சசிகலா முதல்வராக எதிர்ப்பு, அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றது, புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது என பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் தமிழக அரசிய களம் தற்போது அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.
 
எப்படியோ ஒரு அரசை அமைத்த ஆளுநர் அந்த அரசு தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அரசு தனது பெரும்பான்மையை இன்று சட்டசபையில் நிரூபிக்க உள்ளார்.
 
இதில் முதலில் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அவருக்கு 116 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தாலே போதுமானது.
 
தமிழக சட்டசபையில் 234 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதா இறந்ததை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளது. மேலும் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண் குமார் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார். மேலும் தற்போது 230 எம்எல்ஏக்கள் தான் சட்டசபைக்கு வரும் சூழல் உள்ளது.
 
இதனால் 230 உறுப்பினர்களில் பெரும்பான்மை மதிப்பு என்பது 116 என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாக கூறப்பட்டுகிறது. இதனால் 6 எம்எல்ஏக்கள் ஆதரவு அவருக்கு அதிகமாகவே உள்ளது என கூறப்படுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் என்ன மனநிலையில் வாக்களிக்க உள்ளார்கள் என்பதிலேயே உண்மையான முடிவு இருக்கும்.