வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 6 நவம்பர் 2015 (05:12 IST)

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
 

 
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் 6 ஆயிரத்து 500க்கும் அதிகமான ஊழியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு 20 சதவீத போனசும், கருணைத் தொகையும் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
 
மேலும், தங்களது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், நவம்பர் 8ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி இரவு 8 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
 
இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றால், தீபாவளி பண்டியின் போது பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்  வேலை நிறுத்த போராட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மேகநாதன் தமிழக அரசிடம் மனு அளித்தார்.
 
மேலும், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அத்தியாவசிய சேவை சட்டத்தின் கீழ் வருவதால் 108 சேவை பாதிக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதிமொழி அளித்தார்.
 
இந்த நிலையில், தொழிலாளர் நல அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸ் சேவையை அளிக்கும் ஜிவிகே-இஎம்ஆர்ஐ நிர்வாகமும், ஊழியர்களிடமும் நவம்பர் 3 ஆம் தேதி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
 
இதனையடுத்து, தீபாவளிக்கு கூடுதல் தொகை வழங்க நிர்வாகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஊழியர்கள் அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.