வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Modified: சனி, 6 பிப்ரவரி 2016 (10:59 IST)

100 நாள் வேலை திட்டம்: தமிழக அரசுக்கு தேசிய விருது

100 நாள் வேலை திட்டம்: தமிழக அரசுக்கு தேசிய விருது

100 நாள் வேலை திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருதினை மத்திய மந்திரி அருண் ஜெட்லி வழங்கினார்.


 
 
இதுதொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகவும், ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முறையில், உடல் உழைப்பினைத் தரவல்ல ஒவ்வொரு ஊரக குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் சராசரியாக 100 நாட்களுக்கு வேலைக்கான உத்தரவாதத்தை வழங்கும் திட்டமாகவும் அமைந்துள்ளது.
 
2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தினை செயலாக்குவதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. தொழிலாளர் மதிப்பீடு, பெண்கள் பங்கேற்பு, ஒரு ஆண்டில் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் சராசரி வேலை நாட்கள் போன்றவற்றில், தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. நடப்பு நிதியாண்டில், தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட 37.29 கோடி மனித சக்தி நாட்கள் என்ற இலக்கீடு இந்தியாவிலேயே அதிகம் ஆகும்.
 
வருடந்தோறும் பிப்ரவரி 2-ந்தேதி டெல்லியில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நாளில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகள், மத்திய குழுவின் மதிப்பீடு மற்றும் ஆய்வின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இவ்வாண்டில், ‘ஒருங்கிணைப்பின் மூலம் நிலைத்த வாழ்வாதாரத்தை ஏற்படுத்துதல்’ என்ற முயற்சிக்காக தேசிய விருதினை தமிழ்நாடு பெற்றுள்ளது.
 
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் பல்வேறு ஒருங்கிணைப்பு பணிகளில் மிக முக்கியமானது ஆகும். 
 
பெருமளவில் மரம் நடும் திட்டத்தின்கீழ் 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது, 4,298 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய மற்றும் நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது போன்ற பணிகள் ஊரகப் பகுதிகளை பசுமைமயமாக்கலை அதிகப்படுத்தியுள்ளது.
 
இந்திய அளவில் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மையான 11 மாவட்டங்களில் புதுக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட சிறப்பு முயற்சிகள் என்ற தலைப்பின் கீழ் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
 
மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பில் முதன்மையான முயற்சிகள் மேற்கொண்டதற்காக, திருவள்ளூர் மாவட்டம் தேசிய விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 2014-2015-ம் ஆண்டில் மட்டும் சுமார் 1,706 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு அதன் மூலம் சிறந்த சமுதாய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
 
மாநிலங்கள் சிறப்பாக செயல் புரிந்ததை அடித்து தேசிய விருதினை 2-2-2016 அன்று டெல்லியில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட 10-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் இருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் கா.பாஸ்கரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
 
மத்திய ஊரக வளர்ச்சித் துறை மந்திரி பீரேந்தர் சிங்கிடம் இருந்து சிறந்த மாவட்டத்திற்கான விருதினை கணேஷூம், புதுக்கோட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்காக வீரராகவரும் பெற்றுக்கொண்டனர்.