ராமேஸ்வரம் பேச்சு: இயக்குநர்கள் சீமான், அமீர் கைது!

Webdunia|
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோரை தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகினர் கடந்த 19-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடத்தினர். பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், அமீர் ஆகியோர் விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்து பேசினர்.

இந்நிலையில், இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஆயுதம் ஏந்திப் போராடத் தயங்க மாட்டோம் என்று பேசியதாகக் கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அக்கட்சியின் அவைத் தலைவர் மு.கண்ணப்பன் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டு, இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

முன்னதாக இயக்குநர்கள் அமீர், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக நேற்று காலையில் இருந்தே தகவல்கள் வெளியாகின. ஆனால் மாலைக்கு பிறகே இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தியத் தண்டனைச் சட்டம் 124 (ஏ) -(அரசுக்கு எதிராகத் தூண்டுதல்), குற்றவியல் நடைமுறைத் திருத்தச் சட்டம் 13 (1) (பி) -(சட்டவிரோத அமைப்புக்கு ஆதரவாகப் பேசுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :