தொண்டு நிறுவனத்தில் 12 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு

Webdunia|
FILE
சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தொண்டு நிறுவனத்தில் 12 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காப்பக பொருளாளர் கைது செய்யப்பட்டார்.

கொருக்குப்பேட்டை கண்ணன் தெருவில் தனியார் தொண்டு நிறுவனம் உள்ளது.

இதன் செயலாளராக சென்னையைச் சேர்ந்த ஆனந்தி அம்மாளும், பொருளாளராக நாகர்கோவிலைச் சேர்ந்த தவசிமணி (30) உள்ளனர்.

இந்த தொண்டு நிறுவனத்தில் 12 சிறுமிகள் உள்பட பெண்கள், முதியவர்கள் என 45-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதிக்கு நேற்று ஒரு புகார் சென்றது. அந்த புகார் மனுவில் கொருக்குப்பேட்டை தொண்டு நிறுவனத்தில் உள்ள பெண்கள், சிறுமிகள் செக்ஸ் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

அங்கு போதிய இட வசதி இல்லை. உரிய ஆவணம் இல்லாமல் தொண்டு நிறுவனம் நடத்தப்படுகிறது என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து ரேவதி மற்றும் பெண்கள் குழந்தைகள், நல அமைப்பு அலுவலர் குளோரி குணசிலி ஆகியோர் தொண்டு நிறுவனத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு 45-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அவர்கள் அங்கு தங்குவதற்கான இட வசதி இல்லை. தொண்டு நிறுவனத்திற்கான உரிமமும் இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் குளோரி குணசிலி தொண்டு நிறுவனத்தில் உள்ள பெண்கள், சிறுமிகளிடம் விசாரித்தனர். அப்போது சிறுமிகளும், பெண்களும் தங்களுக்கு பொருளாளர் தவசிமணி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறினர்.

இதுகுறித்து ரேவதி, குளோரி குணசிலி கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் தெய்வசிகாமணி, கொருக்குப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உரிய ஆவணம் இல்லாமல் தொண்டு நிறுவனம் நடத்தியதாக ஆனந்தி அம்மாளையும், பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் செக்ஸ் தொல்லை கொடுத்த பொருளாளர் தவசிமணியையும் கைது செய்தனர்.
ஆனந்தி அம்மாளை தண்டையார்பேட்டை மகளிர் காவல்துறையும், தவசிமணியை கொருக்குப்பேட்டை ஆய்வாளரும் கோவிந்தராஜும் விசாரித்து வருகிறார்கள்.

இன்று காலை மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி தொண்டு நிறுவனத்திற்கு சென்று சீல் வைத்தார். அங்கு இருந்த சிறுமிகள், பெண்கள், முதியவர்கள் கீழ்ப்பாக்கத்தில் கேல்பிஸ்சில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த தொண்டு நிறுவனத்தின் கிளை ராயபுரத்திலும் செயல்பட்டு வருகிறது. அதில் உள்ள குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கீழ்ப்பாக்கம் கேல்லிஸ்சில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :