சொகுசு வாழ்க்கைக்காக மூதாட்டி சகோதரிகளை கொலை செய்த பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்

Ilavarasan| Last Updated: திங்கள், 21 ஏப்ரல் 2014 (14:10 IST)
சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி சகோதரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கியுள்ளது. வீட்டு வேலை கேட்டு சென்ற பெண் கணவனுடன் சேர்ந்து பணம், நகைக்காக  கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை  தொடர்பாக சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு மாம்பலம் கோதண்டராமன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயா (எ) ஜெயலட்சுமி (70). இவரது தங்கை காமாட்சி (65). இருவரும் வாடகை வீட்டில் வசித்தனர். ஜெயாவுக்கு திருமணம் ஆகவில்லை. காமாட்சிக்கு திருமணம் ஆகி விட்டது. குழந்தை  இல்லை. இவர், 10 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்று விட்டார். மத்திய அரசு நிறுவனமான கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பேராசிரியராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயாவை காமாட்சிதான் உடனிருந்து கவனித்தார்.
 
இந்நிலையில், கடந்த 2011 மே 11 அன்று மதியம் சகோதரிகள் இருவரும் வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர். அவர்களை யாரோ  கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. கொலையாளிகளை  பிடிக்க குமரன் நகர் காவல்துறையினர் 5 தனிப்படை அமைத்தனர். தீவிர  விசாரணை நடத்தியும் பலன் இல்லை. 
 
முதல்கட்டமாக, சகோதரிகளின் வீட்டுக்கு வந்து செல்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
 
வங்கி அதிகாரி ஒருவர் அடிக்கடி ஜெயா வீட்டுக்கு வந்து சென்றது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடத்தியும் பலனில்லை. தொடர்ந்து  அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர், துணி அயன் செய்பவர், கூலி வேலை செய்பவர்கள் என 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை  நடத்தியும் எந்தவித துப்பும் துலங்கவில்லை.
 
இந்த பரபரப்பான நிலையில், மூதாட்டி சகோதரிகளின் வீட்டில் வேலை கேட்டு சென்ற பெருங்குடி அறிஞர் அண்ணா நகர் விஜயா என்ற விஜயலட்சுமி (40), அவரது கணவன் ஆட்டோ டிரைவர் மகேந்திரன் (53), தரமணி வினோத் குமார் (19), தி.நகர் சந்தோஷ் என்ற சந்தோஷ்  குமார் (21), அதே பகுதியை சேர்ந்த முத்து (19), ஹரி என்ற ஹரி  கிருஷ்ணன் (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் கைது  செய்யப்பட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :