என்னுடைய நீக்கம் தலைவரை மிரட்டி எடுக்கப்பட்டது - மு.க.அழகிரி

Last Updated: திங்கள், 31 மார்ச் 2014 (13:31 IST)
என்னுடைய நீக்கம் மிரட்டலின் அடிப்படை எடுக்கப்பட்டது, மிரட்டல் நபர்களை விரைவில் வெளிப்படுத்துவேன் என்று மு.க.அழகிரி கூறினார்.
சேலம் விநாயகா மிஷன் நிறுவுனர் சண்முகசுந்தரம் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சேலம் வந்திருந்த மு.க.அழகிரி பின்னர் தனது ஆதரவாளர்களைச் சந்தித்துவிட்டு, நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், தனது ஆதரவாளர்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டு வருவதாகவும், அவர்கள் தங்கள் கருத்துகளைச்
சொல்லி வருகிறார்கள் என்றும் கூறினார் அழகிரி.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், நாங்கள் திமுகதான். கருணாநிதிதான் எங்கள் தலைவர். நாங்கள் திமுக கரை வேட்டி கட்டியே இருப்போம் என்றார் அழகிரி.

கட்சியில் தலைவர் முடிவு தான் இறுதி என்றபோது, அவர்தானே உங்களை நீக்கினார் என்று கேட்டபோது, அது நிர்பந்தத்தால் எடுக்கப்பட்ட முடிவு; மிரட்டலின் அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான் அந்த முடிவு, அதற்காக மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். மிரட்டல் நபர்கள் குறித்து விரைவில் வெளிப்படுத்துவேன் என்றார் அழகிரி.
திமுக தோற்கட்டும் என்று கூறி வருகிறீர்கள். அப்படியானால், எந்தக் கட்சி ஜெயிக்கும் என்று கேட்டதற்கு, அப்படிப்பட்ட ஜோசியம் எல்லாம் எனக்குத் தெரியாது என்றார் அழகிரி.

அப்படியானால், உங்கள் கணிப்பையும் மீறி திமுக வெற்றி பெற்றால் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, அத்தைக்கு மீசை முளத்தால் சித்தப்பா... என்றாகுமா என்று கூறிவிட்டுச் சென்றார் மு.க.அழகிரி.


இதில் மேலும் படிக்கவும் :