வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: கூடங்குளம் போராட்டக்குழுவில் பிளவு

கூடங்குளம் போராட்டக்குழு, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதால், போராட்டக்குழுவின் நிர்வாகிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
FILE

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இடிந்தகரையில் கடந்த 2ஆண்டுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது.

ஆம்ஆத்மி கட்சியில் கூடங்குளம் போராட்டக் குழுவினர் இணையும் நிகழ்ச்சி இடிந்தகரையில் இன்றுமாலை நடக்கிறது.

இதுகுறித்து கூடங்குளம் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது, பாராளுமன்ற தேர்தலில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். இதற்காக போராட்டப் பகுதி மக்களுடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறோம்.

இந்த நிகழ்ச்சி இன்றுமாலை இடிந்தகரையில் நடக்கிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை. ஆம்ஆத்மி கட்சியில் இணைவதற்கான காரணங்களையும், அக்கட்சி அளித்த வாக்குறுதிகளையும் இன்று மாலை வெளியிடுவோம் என்று அவர் கூறினார்.

உதயகுமார் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 2½ஆண்டுகளாக எளிய மக்களுக்காக போராடி எதையும் சாதிக்க முடியாத நிலையில், யாரும் ஏறெடுத்து பார்க்காத கவலையில் அரசியல் தளத்துக்குசென்றால், ஒரு விடிவை ஒரு முடிவை உருவாக்க இயலுமா என்று மக்களும், நாங்களும் சிந்தித்தோம். எங்களுக்கு ஆதரவாக நின்ற தமிழக கட்சிகளை ஒருங்கிணைக்க முயன்றோம்.

அது முடியாமல் போனவுடன் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான பிரசாந்த் பூஷன், இடிந்தகரை வந்து எங்களை தங்கள் கட்சிக்கு அழைத்தார்.

அதன்படி அக்கட்சியுடன் கடிதம், பேச்சு, வாதம், கருத்து பரிமாற்றம், நேரடி பேச்சு வார்த்தைகள் மூலம் இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாடடம் என்பதுபோல நடந்தது. அவதூறுகள் பரப்பப்பட்டன.

காலம் மாறும். நானும், மைபா ஜேசுராஜூம், இன்னும் சிலரும் நாடாளுமன்ற தேர்தலின் மூலமாக மக்கள் பணியை தொடரவிருக்கிறோம். ஆகவே இனி இடிந்தகரை சகோதரிகள் ஓர் ஒருங்கிணைப்பு குழு அமைத்து, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை தலைமையேற்று நடத்துவர் என்று உதயகுமார் கூறியுள்ளார்.

உதயகுமாரின் முடிவுக்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழுவில் உள்ள சிலரது மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டக்குழு தலைவரான புஷ்பராயன், நிர்வாகி முகிலன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புஷ்பராயன் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, என்னை யாரும் கிணற்றில் தள்ளிவிடாதீர்கள். சிலர் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்து அரசியலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம். இதை அரசியலில் இணைக்கக் கூடாது.

நான் ‘‘ஆம்ஆத்மி’’ கட்சியில் இணைந்து தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட நிர்பந்திக்கிறார்கள். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு எனக்கு செல்வாக்கு, பண பலம் இல்லை. எனது குடும்பம் இதை விரும்ப வில்லை. எனவே என்னை அரசியல் எனும் பாழுங் கிணற்றில் தள்ளி விடாதீர்கள் என்று புஷ்பராயன் கூறியிருக்கிறார்.

உதயகுமாரின் கருத்துக்கு மாற்றாக புஷ்பராயன் அறிக்கை வெளியிட்டிருப்பது கூடங்குளம் போராட்டக்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போராட்டக்குழு வினரின் முடிவுக்கு தலைவர் மற்றும் முகிலன் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், போராட்டக்குழுவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது.