செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (00:26 IST)

பாஜக அரசின் கெடுபிடித் தந்திரத்தில் தமிழக ஆளுநரா? - திமுக தீர்மானம்

நிலையான அரசு அமைக்க “மாற்று ஏற்பாடுகள்” செய்ய முடியாமல் மத்திய பா.ஜ.க. அரசின் கெடுபிடித் தந்திரத்தில் தமிழக ஆளுநரும் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது என திமுக சந்தேகம் கிளப்பியுள்ளது.


 

திமுக உயர்நிலைச் செயல்திட்டக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், “யார் முதல்வராக” இருப்பது என்று ஆளுங்கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டியின் காரணமாக மாநிலத்தில் நிலையற்ற சூழ்நிலை உருவாகி, அரசியல் சட்ட ரீதியாக ஒரு பெரும் நெருக்கடியை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் முதலமைச்சரும் இல்லை. முழு அரசும் இல்லை. எஞ்சியிருப்பது “காபந்து முதலமைச்சர்” மற்றும் “காபந்து அரசு” மட்டுமே. 5.2.2017 அன்று ராஜினாமா செய்த முதலமைச்சரின் கடிதத்தை உடனே ஏற்றுக் கொண்ட ஆளுநர் “மாற்று ஏற்பாடு செய்யப்படும்” என்று அறிவித்தார்.

ஆனால் இன்றுவரை மாநிலத்தில் ஒரு நிலையான அரசை அமைக்க முன்வராமல் தாமதம் செய்து கொண்டிருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமானது என்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஏற்கனவே ஒன்பது மாதங்கள் முடங்கிவிட்ட மாநில அரசின் நிர்வாகச் சக்கரம் இன்றைக்கு முழுவதுமாக நிலை குலைந்து நிற்கிறது.

மத்திய அரசு முன்கூட்டியே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துவிட்ட பிறகும், தமிழக அரசு இன்னும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டங்களைக்கூட நடத்தவில்லை. ஏற்கனவே 5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் மாநில அரசின் நிதி நிர்வாகம் இதனால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் நிலையான அரசு அமைக்க “மாற்று ஏற்பாடுகள்” செய்ய முடியாமல் மத்திய பாஜக அரசின் கெடுபிடித் தந்திரத்தில் தமிழக ஆளுநரும் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது.

ஆகவே அரசியல் சட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு உட்பட்டு உடனடியாக மாநிலத்தில் நிலையான ஆட்சியை அமைக்க மாநில ஆளுநர் இனியும் கால தாமதம் செய்யாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த உயர்நிலைச் செயல்திட்டக்குழு கேட்டுக் கொள்கிறது” என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.