வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மனோதத்துவம்
Written By Murugan
Last Modified: புதன், 9 மார்ச் 2016 (22:00 IST)

குழந்தைகள் மனநிலையும், பெரியவர்களின் ஒத்துழைப்பும்!!

ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் அவன். இணைய வசதியை பயன்படுத்துவது குறித்த அறிவு அவனுக்கு நிறையவே உண்டு. அவனது தந்தையும் அவனது விருப்பத்தை புறக்கணிக்காமல் மகனுக்காக வீட்டிலேயே இணைய வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.
அத்துடன் தந்தையின் மொபைல் போனில் உள்ள அப்ளிகேஷன்களை அலசுவது, வாட்ஸ்ஆப், பேஸ்புக் என்று அனைத்தையும் நோண்டுவது இவையெல்லாம் அவனது பொழுதுபோக்கு. அது தவிர, இசை, விளையாட்டு போன்ற தனித்திறன் வகுப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் எல்லாம் அவனது விருப்பத்திற்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.


 

 
படிப்பு நேரத்தில் காட்டும் கண்டிப்பைத் தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் அவன் இஷ்டம்தான். சிறுவனும் பெற்றோர் கொடுக்கும் சுதந்திரத்தின் அளவைப் புரிந்து வைத்திருக்கிறான். மேலும் பெற்றோரின் வார்த்தைகளுக்கும் மரியாதை தருகிறான். தலைமுறை இடைவெளி என்பதே அந்த வீட்டில் இல்லை.
 
உண்மையில் இந்திய சமுதாயத்தில் இது ஒரு நல்ல மாற்றம். ஒரு காலத்தில் குடும்பங்கள் பெரியது. சிறுவர்களின் சின்ன, சின்ன ஆசைகளைக் கூட தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் நினைத்த காலம் உண்டு. சிறுவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள்தான் தீர்மானிப்பார்கள். சில நேரங்களில் விருப்பமில்லாதவற்றைத் திணிக்கவும் செய்வார்கள். ‘சின்ன பையன், உனக்கென்ன தெரியும்’ என்ற குத்தல் வேறு.
 
அவற்றையெல்லாம் குழந்தைகளின் நன்மைக்காகத்தான் செய்ததாகச் சொன்னாலும், குழந்தைகளுக்கு விருப்பமில்லை என்றால் கற்பது வீணாகத்தான் போகும். அது மட்டுமல்ல, சில நேரங்களில் பெரியவர்கள் மீதான வெறுப்புணர்ச்சி, அவர்கள் திணிக்கும் விஷயங்களிலும் பரவும். அதனால் விருப்பமான துறையும் கசக்கும். விளைவு, சில வீடுகளில் பெற்றோருக்கும், மகன் அல்லது மகளுக்கும் பெரியதொரு போர் நடக்கும். பெற்றோரின் எண்ணங்களுக்கு நேர்மாறாக பிள்ளைகள் நடப்பார்கள்.
 
ஆனால், தற்போது அப்படி இருப்பதில்லை. காலம் மாறியுள்ளது. சிறியவர்களின் உணர்ச்சிகளுக்கும் பெரியவர்கள் மரியாதை தருகிறார்கள். பிள்ளைகளுக்கு தெரியும் விஷயங்களை பெரியவர்கள் காது கொடுத்து கேட்கிறார்கள். தங்களுக்கு தெரியவில்லை என்றால் சிறியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். அது போல தங்களுக்கு என்ன தேவை என்று தீர்மானிப்பதை குழந்தைகளிடமே விட்டு விடுகிறார்கள். தேவைப்பட்டால் ஆலோசனை வழங்குகிறார்கள்.
 
மனோதத்துவத்தில் இது வரவேற்கத்தக்க, அவசியமான மாற்றம். இன்று நவீன சூழலில் தொழில்நுட்ப கருவிகள் ஏராளமாகப் பரவிவிட்டன. சிறு வயதிலேயே அவற்றை அனுபவிக்க வேண்டிய காலம் இது. அதனால் தேவையான அளவுக்கு குழந்தைகள் பயன்படுத்தட்டும். அதனால் ஏற்படும் தீமைகளை மட்டும் கோடிட்டு காட்டினால் போதும். அவர்களே புரிந்து கொள்வார்கள். தலைமுறை இடைவெளி என்பதும் குறையும். குழந்தைகளையும் தனிநபர்களாக மதித்து அவர்களது உணர்வுகளை மதிக்கப் பழகுவோம். தானாகவே அவர்கள் பெரியவர்களின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பார்கள்.