வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. பெருமாள் மணிகண்டன்
Last Updated : புதன், 15 அக்டோபர் 2014 (12:55 IST)

தலைவா வா! - ரஜினி ரசிகர்களின் அன்பும் தியாகமும்

தங்கள் தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என நீண்ட நாட்களாக ரஜினியின் ரசிகர்கள் அழைப்பு விடுத்தபடி உள்ளனர். 
 
ரஜினியின் புதுப் படங்கள் வரும் போதும், வருடம் தோறும் அவரது பிறந்த நாளின் போதும் ஒட்டப்படுகிற சுவரொட்டிகள், சுவரெழுத்துகள் மூலம் தங்கள் விருப்பத்தை நேரடியாகத் தெரிவித்தபடியே உள்ளனர். தங்களுக்கென கொடியை வடிவமைத்து அதை மாநிலம் முழுவதும் பயன்படுத்துகின்றனர். 
 
தமிழகத்தில் திரைப்படம் பார்க்கிறவர்களில் பெரும்பாலானவர்களை ரஜினி தனது திரை மொழியால் வசீகரித்து உள்ளார், இதில் தீவிரமான ரசிகர்கள், மன்றங்களைப் பதிவு செய்து அதை மாவட்டத் தலைமை ரசிகர் மன்றத்தில் இணைத்து தொடர்ந்து இயங்கி வருகின்றனர். 

 
இப்போது தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ரஜினியைத் தங்கள் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர், ரஜினி எங்களுக்கும் நண்பர் தான் என ஓர் அறிக்கையை வெளியிட்டார். பொதுவாக தேசிய கட்சிகளுக்கு ரஜினியின் அரசியல் வருகை சார்ந்து ஆர்வம் இருப்பது அவ்வப்போது வெளிப்படும். 
 
1992இல் வெளியான அண்ணாமலை படத்தின் சில வசனங்களுக்கு அரசியல் அர்த்தம் கற்பிக்கப்பட்டது. பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் ரஜினியின் உரையால் அன்றைய அமைச்சரும் மூத்த அரசியல் ஆளுமையுமான ஆர்.எம் வீரப்பன் பதவி இழக்க வேண்டி வந்தது. 1996இன் சட்ட மன்றத் தேர்தலில் த.மா.கா. உதயம், 'ரஜினி வாய்ஸ்' என ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தீவிரமானது. 

 
அதுவரை சமூகப் பணியில் மட்டுமே ஈடுபட்டு வந்த ரசிகர்கள், முதல் முறையாக தேர்தல் பணிகளில் இறங்கினர்.
மேலும்

தேர்தல் முடிந்த பிறகு ரசிகர்கள் தங்கள் பழைய வேலைகளுக்குத் திரும்பினர். எதிர்பாராமல் வந்த 1998 பாராளுமன்றத் தேர்தலிலும் ரஜினி ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட கூட்டணிக்கு ஆதரவாகத் தேர்தல் வேலைகளைச் செய்தனர். 
 
தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் பணிகள் செய்துவிட்டு, மற்ற நேரங்களில் அரசியலுக்கு வெளியே இருப்பதால் அகத்திலும் புறத்திலும் உண்டான சிக்கல்களைத் தங்கள் தலைவருக்காக ரசிகர்கள் பொறுத்துக்கொண்டனர். 

 
1996 சட்டமன்றம் மற்றும் 1998 பாராளுமன்றத் தேர்தலில் ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கி, ரசிகர்களை வழி நடத்தினார், ஆனால் 1999 பாராளுமன்றத் தேர்தலில் ரஜினி எந்த நிலைப்பாடும் எடுக்காமல் 'அரசியல் மௌனம்' கொண்டார், இது ரசிகர்களைப் பரிதவிக்க வைத்த முடிவாக மாறியது. தமிழகத்தின் 1996, 1998 ஆகிய இரண்டு தேர்தல்களில் தலைவர் ஆணைப்படி களப்பணி ஆற்றிய ரசிகர்களை, பிரதான கட்சிகள் 1999 பாராளுமன்றத் தேர்தலில் மறைமுகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தன. அதுவரை ஒற்றுமையாக இருந்த ரசிகர்கள், இந்தத் தேர்தலில் தங்கள் விருப்பத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப கட்சிகளைத் தேர்வு செய்து, களப் பணி செய்தனர். 

 
தீவிர ரசிகர்கள், தங்கள் விருப்பத்திற்குரிய ரஜினியும் எம்.ஜி.ஆர். போல அரசியல் செய்வார் என்ற அதீத நம்பிக்கையை 1990களின் ஆரம்பம் முதல் வளர்த்து வந்தனர். தேசிய கட்சிகள், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ரஜினி வருவார் என எதிர்பார்த்திருந்தன, ஆனால் எப்போதும் ரஜினி தனது அரசியல் எதிர்காலம் ஆண்டவன் கையில்… என்ற தத்துவ நிலையைத் தாண்டி வரவில்லை. 

 
ரஜினியின் அரசியல் நிலைப்பாடு, 1996 முதல் 2004 வரை வெவ்வேறு மாற்றங்களைக் கண்டது அதற்கு ஏற்ப ரசிகர்களும் அரசியல் களத்தில் பணி செய்தனர். ஆனால் ஒருபோதும் தங்கள் தலைவர் மீது அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவது இல்லை.
மேலும்

இன்னமும் ஒவ்வொரு புதுப் பட வெளியீட்டின் போதும், தலைவர் பிறந்த நாளின் போதும் தங்கள் தலைவரை அரசியலுக்கு வருமாறு அன்பொழுக, தங்கள் செலவில் செய்யும் விளம்பரங்களில் அழைத்தபடியே உள்ளனர். 

 
தேசிய கட்சிகளின் தலைவர்கள் ரஜினியின் அரசியல் குறித்துப் பேசுவதில் தமிழக மக்கள் நலன் என்பதையும் தாண்டி, தங்கள் கட்சியின் எதிர்காலம் குறித்த எண்ணங்களும் கலந்தே உள்ளன. ஆனால் அவரது தீவிரமான ரசிகர்கள், மன்றம் அமைத்து, தங்கள் தலைவர் சொன்ன போதெல்லாம் அரசியலில் களப்பணி செய்து, அதனால் உண்டான வாழ்வியல் சிக்கல்களை எல்லாம் சமாளித்து, இன்னமும் ரஜினி மீது பேரன்பு கொண்டு காத்திருக்கின்றனர். தேசிய கட்சித் தலைவர்களின் அழைப்பைப் பரிசீலிப்பதற்கு முன்னால், தம் தீவிரமான ரசிகர்களின் நீண்ட கால அன்பையும் தியாகத்தையும் ரஜினி கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். 

 
எப்படியும் தங்கள் தலைவர் அரசியலுக்கு வந்து விடுவார் என எண்ணி வாழ்வின் பிரதான கலங்களில் ரசிகர் மன்றப் பணிகளில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட அவரின் தீவிர ரசிகர்கள் இன்று தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு தலைவர் எதாவது நல்லது செய்வாரா? என்றே ஏங்குகின்றனர். அன்றும் இன்றும் அவர் தான் 'சூப்பர் ஸ்டார்'. ஆனால் ரசிகன் என்பதைத் தாண்டி அவரைத் தலைவராக ஏற்று, தொண்டனாக நின்று களப் பணி செய்த தீவிர ரசிகர்களின் ரஜினி மீதான அன்பும் தியாகமும் கவனிக்கப்படாமல் தனது அர்த்தத்தை இழந்துகொண்டிருக்கிறது.