வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. பெருமாள் மணிகண்டன்
Last Updated : சனி, 25 அக்டோபர் 2014 (13:53 IST)

ஓ.பன்னீர்செல்வத்தின் பணிவும் வாரிசு அரசியலும்

ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் முதல்வராகப் பொறுப்பு ஏற்று ஒரு மாதம் முடிய போகிறது. இரண்டாவது முறை முதல்வராகப் பொறுப்பு ஏற்று, பணியாற்றி வருகிறார். முதல் முறை முதல்வர் பதவி வகித்த பிறகான காலங்களில் அவர் எங்கேயும் தன்னை 'முன்னாள் முதல்வர்' என அடையாளப்படுத்திக் கொண்டதே கிடையாது. 
 
திராவிட இயங்கங்களின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் பன்னீர் செல்வத்தின் இடம் தனித்துவம் மிக்கது. பொதுவாக அரசியல் தலைவர்களிடம் எளிதில் காணக் கிடைக்காத பணிவும் எளிமையும் நிறைந்த மனிதராகவே பன்னீர் அறியப்படுகிறார். 
 
1980களில் பெரியகுளம் நகர இளைஞர் அணி துணைச் செயலராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய பன்னீர், தனது கடின உழைப்பின் மூலம் அதிமுகவின் பொருளாளராக உயர்ந்தார். 1996 உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வெகு சிலரே வென்றனர் அந்தத் தேர்தலில் பெரியகுளம் நகராட்சித் தலைவராக நேரடித் தேர்தலில் வென்ற பன்னீர் செல்வம், 2001இல் தமிழ்நாட்டின் 18ஆவது முதல்வராக அப்போதைய சூழலில் அதிமுக பொதுச் செயலாளரால் தேர்வு செய்யப்பட்டது அவரது விசுவாசத்திற்கும் உழைப்பிற்கும் கிடைத்த தகுதி. 


 
 
1989 முதலான கடந்த 25 ஆண்டுகளில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமிழகத்தின் இரு பெரும் அரசியல் சக்திகளாக உள்ளனர். இவர்கள் இருவரது அரசியல் மற்றும் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் தேசிய கட்சிகள் தொடர்ந்து வலு இழந்து வருகின்றன அதே போல முதல்வர் கனவுடன் கட்சி தொடங்கிய சிலரது கனவுகள் நிறைவேற முடியாமல் போனது. 
 
அரசியலுக்கு வெளியே உள்ள சிலரையும், சில சிறிய / சாதிய கட்சித் தலைவர்களையும் 'எங்கள் முதல்வரே' எனத் தொண்டர்களும் ரசிகர்களும் விளிக்கிற வழக்கம், தமிழகத்தில் பரவலாக உள்ளது. கோஷ்டி அரசியல் சற்று அதிகமாக உள்ள மாநில மற்றும் தேசிய கட்சிகளின் தொண்டர்கள் தங்களுக்குப் பிடித்த இரண்டாம் நிலைத் தலைவரை 'எங்கள் மூச்சே! எங்கள் முதல்வரே!' எனச் சுவரொட்டி / சுவரெழுத்துகளில் குறிப்பிட்டு, சந்தோசப்பட்டுக் கொண்டனர். 
 
அடுத்தடுத்த தேர்தல்களில் வென்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி  முதல்வர்களாக அமர்ந்தனர். 2001 மே மாதத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வென்ற பின்னர் செப்டம்பரில் சட்டச் சிக்கல் காரணமாகப் பன்னீர் செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றார். கடந்த 25 ஆண்டுகளில் எத்தனையோ பேர் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டிருந்தாலும் கருணாநிதி, ஜெயலலிதா இருவரைத் தவிர்த்து அதில் அமரும் வாய்ப்பினைப் பெற்றவர் ஓ. பன்னீர் செல்வம் மட்டுமே! 
மேலும்

பன்னீர் செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்ற உடன் அவரைப் பற்றி, அவரது பணிவைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டது. சில அரசியல் பத்திரிகைகள் கூட அவரது பணிவைப் பயம் என்பதாகச் சித்திரித்துக் கட்டுரைகள் எழுதின. 
 
இப்போதைய அதிமுக தலைமையிடம் அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள், தொண்டர்கள் அனைவருமே சற்றே மிகையான பணிவை வெளிப்படுத்துவர். ஆனால் அதற்கும் முதல்வர் பதவியில் பன்னீர் வெளிப்படுத்துகிற பணிவு, எளிமைக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு இக்கட்டான சூழலில் ஜெயலலிதாவிடம் இருந்த முதல்வர் பதவி பன்னீருக்குத் தரப்பட்டது. 
 
இந்திய அரசியலில் வெகு சிலர் மட்டுமே ரத்த வாரிசாக இல்லாத போதும் இக்கட்டான வேளைகளில் முதல்வர், பிரதமர் போன்ற தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வரப்பட்டனர். 

 
பெரும்பாலும் இரத்த வாரிசுகளைத் தலைவர்கள் தங்கள் வாழும் காலத்திலேயே அரசியலில் வளர்த்து ஆளாக்கி விடுகிறார்கள். பிரதமராக இருந்த தேவகவுடா, அவர் தம் வழிகாட்டுதலின் பேரிலேயே அவர் மகன் மாநில முதல்வர் ஆனார். பஞ்சாபில் பாதல், தந்தை முதல்வராக இருக்கும் போது துணை முதல்வர் பொறுப்பில் நியமிக்கப்பட்டு, அரசியல் நுணுக்கங்களை தந்தையின் நிழலில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். 
 
மராட்டியத்தில் சரத் பவாரின் வாரிசாக அறியப்படுகிற அவரது சகோதரர் மகனுக்கு, கட்சியின் முன்னணியினரைத் தாண்டி துணை முதல்வர் வாய்ப்பு வழங்கப்பட்டது. உத்திர பிரதேசத்தில் முலாயம் தம் மகனை முன் நிறுத்தி ஒரு தேர்தலைச் சந்தித்து அவரை முதல்வர் ஆக்கினார், இப்போதும் அந்த மாநிலத்தில் பெரிய சிக்கல்கள் எழும் போது முலாயம் பேட்டி கொடுக்க மறப்பதில்லை. 
லாலு விசயத்தில் அவர் மனைவி பொறுப்பேற்றார். ஒடிசாவில் நவீன் பட்நாயக் என இரத்த உறவுகள் வாரிசாக நியமிக்கப்படுகிற சூழலில் பன்னீர் செல்வத்திற்கு இந்தப் பதவி, ஜெயலலிதா அவர் மீது கொண்ட நம்பிக்கையால் வழங்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தன்னை முன் நிறுத்தியே பிரசாரம் செய்தார். மக்கள் ஜெயலலிதா மீது கொண்ட நம்பிக்கையால் அதிமுகவிற்கு வாக்களித்தனர்.
 
இன்றைய ஜனநாயக அமைப்பின்படி தமிழக முதல்வர் பதவி, ஜெயலலிதாவிற்கு மக்கள் வழங்கிய பதவி என்ற புரிதலுடனே பன்னீர் இந்த நாற்காலியில் அமர்ந்துள்ளார். 
 
முதல்வர் பதவியின் ஆடம்பரங்களைத் தவிர்த்து அவர் கை கொள்கிற எளிமையும் பணிவும் தமிழ் மனத்தின் கூச்ச நாச்சத்தில் இருந்து வெளிப்படுகிற உயரிய குணம். இரத்த வாரிசுகள் பதவியில் காட்டுகிற ஆடம்பரத்தைப் பன்னீர் செல்வம் வெளிப்படுத்தாமல் இருப்பது, பாராட்டைப் பெறுவதற்குப் பதிலாக விமர்சிக்கப்படுகிறது. 
 
நகர்மன்றத் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, மாவட்டச் செயலாளராக, மாநிலப் பொருளாளராக பன்னீர் செல்வம் சிறப்பாகவே செயல்பட்டார். 'மூளி என்றால் நீங்கள் ஏன் மூக்கைத் தொட்டு பார்க்கின்றீர்கள்?' எனக் கேட்ட பன்னீர்செல்வத்தின் சட்டமன்றச் செயல்பாடுகளும் வேகமாகவே இருந்தன. 

 
அடுத்த தேர்தலுக்குள் தங்கள் தலைவி வழக்கில் விடுதலையாகி வந்து அவர் தலைமையில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு அதிமுக தொண்டனின் விருப்பமும். எம்.ஜி.ஆர். மரணத்திற்குப் பிறகு இரண்டாக உடைந்து நின்ற அதிமுக இன்று சட்டமன்றம், உள்ளாட்சி, கூட்டுறவு, லோக்சபா, ராஜ்யசபா என அனைத்திலும் அதிக இடங்களை வென்று வலிமையுடன் எழுந்து நிற்க ஜெயலலிதாவே காரணம். 
 
சட்டச் சிக்கல்களின் காரணமாக இன்று ஜெயலலிதா தன்னிடம் தற்காலிகமாக அளித்த முதல்வர் பதவியை அவரிடம் நல்ல படியாகத் திருப்பி தந்து விட்டு, அதிமுகவின் நம்பகமான வலிமை மிக்க இரண்டாம் கட்டத் தலைவராக இருப்பதையே பன்னீர் செல்வம் விரும்புவார். அப்போதும் அவரது பணிவும் எளிமையும் அவருடனே இருக்கும், அணிகலன் போல! 
 
கானகம் சென்ற ராமன், நாடு திரும்புவான் என்ற நம்பிக்கையில் பரதன் பாதுகை வைத்து ஆண்ட மரபின் நீட்சியாகப் பன்னீர்செல்வம் ஜனநாயகக் காலத்தில் இருக்கிறார். தலைவர்களின் வாரிசுகள் குறித்து இன்றைய இந்திய ஜனநாயகத்தில் விவாதிக்க எவ்வளவோ இருக்கிறது. இரத்த வாரிசாக இல்லாமல் ஒரு சிக்கலான நேரத்தில் தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்காகத் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றும் ஓ.பன்னீர்செல்வம், நவீன பரதனாகவே ஜனநாயக வரலாற்றில் தென்படுகிறார்.