வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

மகிஷனை கொன்று மகிஷாசுர மர்த்தினியாக திரும்பிய தேவி துர்கா

இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்பது முறையே பார்வதி, லட்சுமி, சரஸ்வதியை குறிக்கும். ஆதலால் நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி, இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரையும் பூஜித்து வழிபட வேண்டும். வீரத்திற்கு துர்க்கையையும், செல்வத்திற்கு லட்சுமியையும், கல்விக்கு  சரஸ்வதியையும் அதிபர்களாக கொள்கின்றனர்.

 
 
இந்த விரதம் 9 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவதால் நவராத்திரி என்றும், சில இடங்களில் பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால் தசராத்திரி என்றும் தசரா என்றும் அழைக்கின்றனர். நவராத்திரி தவிர தேவிபூஜை, வாணி விழா, ஆயுதபூஜை, மகா நவமி  நோன்பு என்றும் பற்பல பெயர்களில் இந்தப் பண்டிகை அழைக்கப்படுகிறது.
 
நவராத்திரியின் இறுதி நாளன்று புத்தகங்கள், பென்சில், பேனாக்கள், வீணை முதலிய இசைக்கருவிகளை, பூஜையில் வைத்து சரஸ்வதி தேவியை வழிபடுவர். மறுநாள் தசமியன்று காலையில் இவற்றை எடுத்து படித்தும் எழுதியும் இசைக்கருவிகளை  மீட்டியும் வேலையை தொடங்குவர். 
 
அசுரனை அழிவு
 
ஒருகாலத்தில் மகிஷன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். இதுகுறித்து அவர்கள் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். மகிஷனின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டுவர சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர்  முடிவு செய்தனர். 
 
மும்மூர்த்திகளின் முகங்களில் இருந்து வெளிப்பட்ட ஒளி, நெருப்பைப்போல் வெளிவந்தது. அது ஒரு பெண் வடிவம் ஆயிற்று. அந்தப்பெண் துர்க்காதேவி என அழைக்கப்பட்டார். ஒன்பது நாள் விரதம் இருந்து ஆயுதபூஜை செய்து பத்தாம் நாள்  வளையலணிந்த கைகளில் வாள்பிடித்து போய் மகிஷனை கொன்று மகிஷாசுர மர்த்தினியாக திரும்பி வந்தாள்.