வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

நவராத்திரி நன்னாளில் சரஸ்வதி தேவியின் வழிபாட்டு பலன்கள் !!

நவராத்திரி நன்னாளில் சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்து பூஜித்து அவள் அருள் பெறுவோம். ஞானம், சாந்தம், வீரம், செல்வம் யாவும் அருளும் அஷ்ட  சரஸ்வதிகள். 

விஷ்ணு புராணம், ஸ்கந்த புராணம், மார்க்கண்டேய புராணம், பத்ம புராணம், வாமன புராணம், கூர்ம புராணம் மற்றும் வேதங்கள், இதிகாசங்கள், சம்ஹிதைகள், மந்திரங்கள் போன்றவை போற்றிக்கொண்டாடும் நாயகி, தேவி சரஸ்வதி. 
 
வாக்தேவீ, நாமகள், கலைவாணி, வாகேஸ்வரி என பலப்பல பெயர்களால் அழைக்கப்படும் சரஸ்வதி, நான்கு கரங்கள் கொண்டவள். சின்முத்திரை, அக்கமாலை, சுவடி, தாமரையை ஏந்தியவள். அழகிய முக்கண்ணி, ஜடாமகுடம் தரித்தவள். வெண்ணிற உடை உடுத்தியவள். வெண்தாமரை மலரில் குடி இருப்பவள். 
 
அன்ன வாகனம் கொண்டிருப்பவள். முனிவர்களால் வணங்கப்படும் ஞான தேவி இவள். அமைதியே வடிவானவள். பாற்கடலில் தோன்றி நான்முகனின் சிருஷ்டிக்கு ஆதாரமாக நின்றவள். வீணையை ஏந்தி ஓங்கார நாதம் எழுப்புபவள். வேத ரூபிணி, நாத சொரூபிணி என்றெல்லாம் போற்றப்படும் ஞான மழை முகிலாக இந்த அன்னை விளங்குகிறாள். பேச்சின் ஆதாரமாக, கலைகளின் வித்தாக இருப்பவளும் இவள்தான். 
 
பிரம்மலோகத்தில், ஞான பீடத்தில் அமர்ந்து வேத கோஷங்களை, சங்கீத நாதங்களைக் கேட்டு மகிழ்பவள். சாரதா, த்ரைலோக்ய மோஹனா, காமேஸ்வரி என பலரூபம் கொண்டவள். நகுலி, ருத்ர வாகீஸ்வரி, பரா சரஸ்வதி, பால சரஸ்வதி, தாரண சரஸ்வதி, நித்யா சரஸ்வதி, வாக்வாதினி, வஷினி, மோதினி, விமலா, ஜபினி, சர்துஸ்வரி என்றெல்லாம் சரஸ்வதியை மந்திர சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.