வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2017 (18:24 IST)

16 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரிகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 16 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்களுக்கு மனித ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது மத்திய படை மற்றும் மாநில படை காவலர்கள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி பீஜபூர் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர் வசிக்கும் 5 கிராமங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், அங்கு நடந்த பல்வேறு சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள் 16 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெட்டகெல்லூர் என்னும் கிராமத்தில் நான்கு பெண்களின் கண்களைக் கட்டி, 14 வயது சிறுவன் உள்ளிட்டோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இது போன்ற கொடூரங்களை எதிர்கொண்ட 20 பெண்களிடம் வாக்குமூலம் பெற வேண்டி உள்ளதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 8 பெண்களுக்கு தலா ரூ.3 லட்சமும், மற்ற 6 பெண்களுக்கு தலா ரூ.2 லட்சமும், போலீசாரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த 2 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மனித உரிமை கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

பெண்கள் மீதான பாலியல் தொடர்பான குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட காவலர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் மனித உரிமை ஆணைய பிரதிநிதிகள் நேரில் விசாரணை நடத்தி அவர்களது வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் மனித உரிமை ஆணையமும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசிடம் விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.