வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Updated : புதன், 16 ஏப்ரல் 2014 (13:31 IST)

யு.பி.ஐ. ஆட்சியில் மன்மோகன் சிங் அதிகாரம் மிக்க பிரதமர் - சஞ்சய் ருவின் குற்றச்சாட்டுக்கு பிரியங்கா பதில்

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மன்மோகன் சிங் மட்டுமே அதிகாரமிக்க பிரதமர் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குடன் இணைந்து பணியாற்றிய பிரதமர் அலுவலக உதவியாளரும், ஊடகத்துறை ஆலோசகருமான சஞ்சய் பாரு ‘சந்தர்ப்பவசமாக வந்த பிரதமர்’ என்ற தலைப்பில் அண்மையில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
 
அதில், தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-வது பதவி காலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தான் உண்மையான பிரதமராக திகழ்ந்தார். சோனியாவின் பக்க வாத்தியம்தான் மன்மோகன்சிங். சோனியாவின் சொல்படிதான் மன்மோகன்சிங்கால் ஆட்சி நடத்த முடிந்தது என்று பல்வேறு தகவல்களை தனது புத்தகத்தில் அவர் கூறியிருந்தார். பிரதமரின் செயல்பாடுகள் குறித்து அவரது உதவியாளர் ஒருவரே பகிரங்கமாக புத்தகம் வாயிலாக விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இது முற்றிலும் தவறான தகவல், சஞ்சய் பாருவின் கற்பனை என்று காங்கிரஸ் தரப்பில் மறுக்கப்பட்டது. பிரதமர் அலுவலகமும் சஞ்சய் பாருவின் குற்றச்சாட்டுகளை மறுத்தது. எனினும் இது குறித்து சோனியாகாந்தி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் தனது சகோதரர் ராகுல் காந்திக்காக அமேதி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் 42 வயது பிரியங்காவிடம் சஞ்சய் பாருவின் புத்தகம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு அவர் சுருக்கமாக பேட்டியளித்தார்.
அப்போது, தனது தாயார் சோனியா பிரதமர் போல செயல்பட்டார் என்பதை அவர் மறைமுகமாக மறுத்தார். இது குறித்து பிரியங்கா கூறுகையில் ‘மன்மோகன்சிங் மட்டுமே அதிகாரமிக்க பிரதமர்’ என்று தெரிவித்தார்.
 
சோனியா காந்தி நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் பேசுகையில், ‘நாட்டு மக்களை துண்டாட நினைப்பவர்களிடம் இருந்து இந்தியாவின் இதயத்தையும், ஆன்மாவையும் பாதுகாக்கவே தற்போதைய தேர்தல் நடக்கிறது. நாங்கள் ஒற்றுமையை விரும்புகிறோம். அவர்கள் பிரித்தாள நினைக்கிறார்கள். என்னை நம்புங்கள்’ என்று குறிப்பிட்டது குறித்து பிரியங்காவிடம் கேட்கப்பட்டது.
 
அதற்கு பதில் அளித்த பிரியங்கா, ‘பாஜக என்னவேண்டும் என்றாலும் சொல்லட்டும். ஆனால் இந்தியாவின் இதயத்தை பாதுகாப்பதற்கான சண்டை தொடர்ந்து நடக்கிறது’ என்று கூறிய, அவர் மேற்கொண்டு அது குறித்து விரிவாக எதையும் கூறவில்லை.