வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Updated : வியாழன், 17 ஏப்ரல் 2014 (11:07 IST)

மோடியின் பிரதமர் கனவு கேஸ் பலூனை போல வெடித்துவிடும் - மம்தா

'கடந்த சில மாதங்களாக நரேந்திர மோடி பிரதமராக வருவார் என்ற மாயை உருவாக்கப்பட்டு வருகிறது. அது கேஸ் பலூனை போன்றது. அந்த பலூனிலிருந்து எப்போது வாயு கசிவு ஏற்படுமோ அப்போதே அந்த பலூன் வெடித்துவிடும்' என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் குமார்கஞ்ச் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் இதுகுறித்து மம்தா பேசியதாவது:- 
 
நீங்கள் கேஸ் பலூனை பார்த்திருக்கிறீர்களா? பலூனில் வாயுவை நிரப்பி அதை தயார் செய்வார்கள். சிறிது நேரத்திற்கு அதனுள் அந்த வாயு அடைபட்டு இருக்கும். பலூனின் உள்ளே உள்ள அந்த வாயு கசிந்தால் அது வெடித்துவிடும். அதுபோலத்தான் மோடி பிரதமர் என்ற மாயையும். மோடி தான் அடுத்த பிரதமர் என அவர்களாகவே (பாஜக) முடிவு செய்து கொள்கிறார்கள். அது மாதிரி ஒன்றும் நடக்காது. 
 
சில ஊடகங்கள் பிரச்சாரங்களை பரப்புவதற்கு அவர்களிடமிருந்து பணம் வாங்கியுள்ளன. அவர்கள் கூறுவதை நம்ப வேண்டாம். திரிணாமுல் காங்கிரசின் ஆதரவின்றி டெல்லியில் எந்த அரசும் அமையாது. டெல்லியில் மதச்சார்பற்ற அரசை திரிணாமுல் காங்கிரஸ் உறுதி செய்யும். இடதுசாரிகள் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்காளத்தில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்த பாஜகவிற்கு பணம் கொடுத்துள்ளது.
 
ஆந்திர பிரதேசத்தை பிரிக்கும் முடிவில் காங்கிரசும், பாஜகவும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? காங்கிரசும், பாஜகவும் இணைந்து நாட்டை விற்று விடுவார்கள். இந்த சக்திகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே போராடி வருகிறது. இனியும் தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் பேசினார்.