வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Updated : திங்கள், 14 ஏப்ரல் 2014 (21:52 IST)

நாட்டில் மோடி அலை இல்லை; பாஜக அலைதான் வீசுகிறது - முரளி மனோகர் ஜோஷி

நாட்டில் பாரதீய ஜனதா அலைதான் வீசுகிறது, நரேந்திர மோடி அலை இல்லை என்று முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
Murali Manohar Joshi
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு அக்கட்சியில் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களில் ஒருவர் முரளி மனோகர் ஜோஷி. முன்னாள் மத்திய அமைச்சரான இவர், அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அந்த தொகுதியை நரேந்திர மோடிக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில், செய்திச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது:-

பிரதமர் பதவிக்கு பாரதீய ஜனதாவின் பிரதிநிதியாக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். நாடு முழுவதும் ஆதரவு கிடைத்து வருகிறது. நாட்டில் தற்போது பாரதீய ஜனதா அலை வீசுகிறது. அதை தனிப்பட்ட நபருக்கு (நரேந்திர மோடி) ஆதரவான அலையாக கருத முடியாது.
 
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டது போன்ற அபிவிருத்தி எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. அபிவிருத்தியில் எந்தெந்த மாநிலத்தில் நல்ல அம்சங்கள் இருக்கின்றனவோ அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள மூத்த தலைவருக்கு (ஜஸ்வந்த் சிங்), தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்குவது இல்லை என தீர்மானித்தது மத்திய தேர்தல் கமிட்டி எடுத்த முடிவு அல்ல. அது கட்சியின் தலைவர் (ராஜ்நாத் சிங்), மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சரால் எடுக்கப்பட்ட முடிவு என்று முரளி மனோகர் ஜோஷி கூறினார்.
 
இவ்வாறு அவர் கூறியிருப்பது பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்திடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், முரளி மனோகர் ஜோஷி என்ன கூறினார் என்பது பற்றி முழுமையாக அறிந்து கொண்ட பின்னர்தான் அதுபற்றி கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.