வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Updated : செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (19:56 IST)

தவறான வழிக்குப் போகும் வருணுக்கு பாடம் புகட்டுங்கள் - பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற தேர்தல் என்பது குடும்பத்து டீ பார்டீ அல்ல. இங்கே நடப்பது ஒரு தத்துவ ரீதியிலான போர் என்பதை பாஜக வேட்பாளர் வருண் காந்தி தெரிந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
Priyanka Gandhi
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த நாள் முதல் வருண் காந்தியை வறுத்தெடுத்து வருகிறார் பிரியங்கா. வருணை எதிர்த்து அவர் போட்டியிடும் சுல்தான்பூரில் பேசிய பிரியங்கா, தவறான பாதையில் போகும் அவருக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்றார். இதற்கு வருணும் அவரும் தாயார் மேனகா காந்தியும் பதிலடி கொடுத்திருந்தனர். இந்த நிலையில் மீண்டும் பிரியங்கா வருண் மீது தாக்குதலை தொடங்கியுள்ளார்.

அமேதியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, இது ஒன்றும் குடும்பத்து டீ பார்ட்டீ அல்ல. இது ஒரு தத்துவ ரீதியிலான போர் என்றார். மேலும், வருண் காந்திக்கு எதிராக தாம் பேசிய பேச்சுகள் அடங்கிய வீடியோ வெளியானதில் எப்போதுமே வருத்தம் இல்லை. அது என்னுடைய கருத்துகள்தானே என்றார். இந்த கருத்து போருக்குப் பின்னர் வருண் காந்தியை தொடர்பு கொண்டு எதுவும் பேசியதும் இல்லை என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.
Varun Gandhi
வருண் காந்தி இதுபற்றி கருத்து தெரிவித்தபோது, எல்லாவற்றுக்கும் ஒரு லட்சுமண ரேகை இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், "என்னுடைய பாதையைப் பற்றி பிரியங்கா பேசுகிறார். என்னைப் பொறுத்தவரையில் எனக்கான பாதை என்பதைவிட தேசத்துக்கான பாதையைத்தான் நான் தேர்ந்தெடுக்கிறேன். நாட்டை கட்டமைக்கக் கூடிய பாதைதான் அர்த்தமுள்ளது என்று நினைக்கிறேன். அதனால் தனிநபர் தாக்குதல்களை விட்டுவிட்டு வேலைவாய்ப்பின்மை, ஊழல், ஏழ்மை பற்றி விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.