வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Webdunia

டெல்லி வழக்கறிஞர்கள் மாநாட்டில் மோடி மந்திரம் ஓதிய வைகோ

நரேந்திர மோடிக்கு வெற்றி! தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி! அதை அடைவதே நமது இலக்கு! என்ற மந்திரத்தை டெல்லியில் நடந்த வழக்கறிஞர்கள் மாநாட்டில் ஓதியவர் வேறு யாரும் இல்லை, 'வைகோ'.
FILE

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக டெல்லியில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மாலனி தலைமையில் வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தது. டெல்லி தல் கோட்ரா உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்த மாநாட்டில் நரேந்திர மோடி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் வைகோ பேசியதாவது:-

இந்தியாவின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வு இங்கு நடைபெறும் வழக்கறிஞர்கள் மாநாடு. நீதிக்காக வாதாடும் வழக்கறிஞர்கள், மனித உரிமைகளுக்காக, நாதியற்றவர்களுக்காக, ஜனநாயகத்துக்காக, ஊழலற்ற அரசு அமைவதற்காக வாதாடும் வழக்கறிஞர்கள், நரேந்திர மோடிக்கு ஆதரவுக் குரல் தந்திட திரண்டிருக்கிறீர்கள். நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. அலைகள் எழும் கன்னியாகுமரியிலிருந்து, பனி படர்ந்த இமயமலை வரை குக்கிராமத்தில், நகரங்கள் என அனைத்து வீடுகளிலும் உச்சரிக்கும் பெயராக மோடியின் பெயர் ஆகிவிட்டது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இதுவரை சுதந்திர இந்தியாவில் ஏற்படாத முடிவுகளாக நம் கதவைத் தட்ட காத்திருக்கின்றன. ஊழல் மயமாகிவிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நடத்தும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையப் போகிறது. அக்கட்சி இந்தியா முழுவதும் நூறு இடங்களை கூட நெருங்க முடியாது. இரட்டை இலக்க வெற்றிதான் கிடைக்கும். ஆனால் நரேந்திர மோடிக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கினால், பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் அதிகமான வெற்றி கிடைக்கும்.

மறுமலர்ச்சி பெறுகிற இந்தியாவாக, புதிய விடியல் காணும் இந்தியாவாக, நரேந்திர மோடி அமைக்கின்ற அரசு வார்ப்பிக்கும் என நம்புகிறேன். மாநிலங்களுக்கு உரிய உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்குகின்ற கூட்டாட்சி கொள்கைக்கு மோடி அரசு உத்தரவாதம் தர வேண்டுகிறேன். பாஜக தரும் என நம்புகிறேன். அனைத்து சமயங்களையும் சமமாக மதித்து நடத்துகின்ற மதச்சார்பற்ற தன்மையை மோடி அரசு பாதுகாக்க வேண்டும் எனக் கோருகிறேன். பாதுகாக்கும் என நம்புகிறேன்.

தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தமட்டில், காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். இலங்கை தீவில் லட்சக்கணக்கான தமிழர்களை, சிங்கள ராஜபக்சே அரசு இனப்படுகொலை செய்வதற்கு ஆயுதங்களைத் தந்து, அனைத்து உதவிகளையும் செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை, அதற்குத் தலைமையேற்ற காங்கிரஸ் கட்சியை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருந்தபோது, ‘இலங்கை தீவில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு இந்திய அரசு எந்த உதவியும் செய்யாது, ஆயுதங்களையும் விற்காது’ என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரகடனம் செய்தார். நாளை மலரப் போகின்ற நரேந்திர மோடி அரசு, ஈழத்தமிழர் பிரச்சனையில் வாஜ்பாய் அவர்களின் அணுகுமுறையை பின்பற்ற வேண்டுகிறேன்.

நரேந்திர மோடிக்கு வெற்றி! தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி! அதை அடைவதே நமது இலக்கு!

இவ்வாறு வைகோ பேசினார்.