வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2015 (18:51 IST)

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கி தெலுங்கு நடிகர் - நடன இயக்குனர் விஜய் பலி

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கி தெலுங்கு நடிகரும், நடன இயக்குனருமான விஜய் பலியானார் என்ற செய்தி தெலுங்கு திரையிலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் நகரத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ‘எட்டகாரம் டாட் காம்‘ என்ற தெலுங்கு படத்தை தயாரித்து வருகிறது. வீரேந்திரி ரெட்டி இயக்கும் இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் நடன இயக்குனரான விஜய் (வயது 25) முதன் முதலாக இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இரு பாடல் காட்சிகள் நேபாளத்தில் படமாக்கப்பட்டன. இதற்காக படப்பிடிப்பு குழுவினர் கடந்த 20ஆம் தேதி நேபாளம் சென்றனர்.
 
கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் காத்மண்டு அருகே உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாக கொண்டு பூகம்பம் ஏற்பட்டதில் அந்த நாடே உருக்குலைந்தது. பூகம்பம் மையம் கொண்டிந்து லாம்ஜங் பகுதியில்தான் படப்பிடிப்பு குழுவினர் பாடல் காட்சிகளை படமாக்கினார்கள். அதிர்ஷ்டவசமாக படப்பிடிப்பு குழுவினர் பூகம்பத்தில் இருந்து தப்பினார்கள். பின்னர் அவர்கள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு நேபாளத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
 
ஆனால், படத்தின் நடன இயக்கத்தையும் ஏற்றுக் இருந்த விஜய், அதற்கான ரிகர்சலில் ஈடுபட்டிருந்தார். எனவே, ரிகர்சலை முடித்து விட்டு தனிக்காரில் சென்றுள்ளார் விஜய் அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அவரது கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக பலியானார். மேலும் படக்குழுவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.
 
நிலநடுக்கத்தின் காரணமாக விபத்தில் சிக்கி பலியான நடிகர் கே.விஜய் சிங் என்ற விஜய் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாபட்லா என்ற இடத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட விஜய், பிரபல நடன இயக்குனரான பிரபுதேவாவை பார்த்து தீவிரமாக நடனம் கற்று நடன இயக்குனர் ஆனார்.
 
படங்களுக்கு நடன காட்சிகள் அமைத்துக் கொண்டே கடந்த 5 ஆண்டுகளாக நடிகர் ஆக முயற்சி செய்து வந்தார். அந்த முயற்சி இப்போதுதான் கைகூடியது. எட்டகாரம் டாட் காம் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.
 
விஜய் பலியானதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். உடனடியாக விஜயின் உடலை ஆந்திரா கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் படி அம்மாநில அரசுக்கு தெலுங்கு திரைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.