வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (15:47 IST)

பசு பாதுகாப்பு: இளைஞர் வேலைவாய்ப்பு – யோகியின் பலே திட்டம்

உத்தர பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவும் அதிரடியான திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடந்துவருகிறது. ஆட்சிக்கு வந்த நாள் தொட்டே பசு பாதுகாப்பில் யோகி அரசு அதீத கவனம் செலுத்தி வருகிறது. அதேசமயம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளும் உ.பியில் கணிசமான அளவு இருக்கிறது.

சமீபத்திய ஒரு ஆய்வில் உத்தர பிரதேசத்தில் சுமார் 10 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான கால்நடைகள் உரிமையாளர்கள் இன்றி, கவனிப்பார் இன்றி சாலைகளில் அனாதையாக விடப்பட்டுள்ளதாக தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற கேட்பாரற்ற கால்நடைகளை பாதுகாக்க மாநிலம் முழுவதும் கோசாலைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் நிர்வகிப்பதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் பசுக்களை பாதுகாக்கவும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார் யோகி ஆதித்யநாத். ”முக்ய மந்த்ரி பி சஹாரா கவு வன்ச் சபாகிதா யோஜனா” என்னும் இத்திட்டத்தின்படி சாலைகளில் திரியும் கால்நடைகளை இளைஞர்கள் அரசு மூலம் பெற்றுக்கொள்ளலாம். அவற்றை பராமரிக்க அரசே பணமும் வழங்கும். அவற்றை முறையாக பராமரித்து அவற்றை உழவுக்கு, பால் தேவைகளுக்கு உபயோகித்து லாபம் ஈட்டலாம் என அத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒரு பசுவுக்கு ஒருநாளைக்கு தீவன செலவுக்காக 30 ரூபாய் வீதம் ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் வளர்ப்பவரின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்பப்படும். ஒருவர் தங்களால் எத்தனை மாடுகளை வளர்க்க முடியுமோ அத்தனை மாடுகளை அரசிடம் வாங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் கால்நடைகள் பராமரிக்கப்படுவதோடு, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.